Saturday, November 22, 2008

நிலவிற்கு ஓர் பயணம்!


சந்த்ரயான் (நிலவு ஊர்தி) வெற்றிகரமாய் அக்டோபர் 22, 2008 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமதனால் விண்ணில் செலுத்தப்பட்டு, மேலும் Moon Impact Probe முலமாய் குழந்தைகள் தினமன்று திரு. அப்துல் கலாம் அவர்களின் யோசனைப்படி நம் தேசியகொடியை நிலவின் முகம்தனில் பதித்தாகிவிட்டது.

வெற்றிகரமாய் இதை சாதித்த இஸ்ரோவை தலைவணங்குகிறேன். இந்த முயற்சியை எண்ணி இரண்டு வருடங்கள் முன்பு பதிவிட்ட ஓர் பதிவை நான் நினைவுகொள்ள விரும்புகிறேன். மென்மேலும் சாதனைகள் தொடர ஆசைகொள்கிறேன்.

Wednesday, November 12, 2008

எதிர்பார்த்தல்


வண்டுகளற்ற கானகத்தில்
மலரும் பூவாய்,
விடியல் கடந்த
முன்தினமொன்றில்
புலர்ந்து கிடக்கிறேன்

கரைதனில் முகம்புதைக்கும்
அலைகளின் நுரைகளாய்,
துடிப்புகள் அதிர‌
மணல் கூட்டில்
நித்திரை பயில்கிறேன்

நிறமிழந்து வண்ணம்கொண்ட‌
சருகுகள் சாலையோரமாய்
வரவுகளேற்க,
நொறுங்கும் ஒலிகளில்
வ‌லிக‌ள் தொலைக்கிறேன்

இறகினும்மெல்லிய தாள்
சுமந்துவந்த கவிதையில்
மனதின் அறைகள் கனக்க‌,
உறையும் நொடிகளில்
உருகுபனியாகிறேன்


இன்று பிரியும்தினம் கேட்கபடுகிறேன்,
நான் இறக்கும்தினமறியேன்
வேண்டுமெனில் துறக்கும்தினம்
குறித்துவைக்கிறேன் கேள்!

Sunday, September 21, 2008

என்ன இல்லை?


என்ன இல்லை இங்கே
என் என்னைத் தவிர

என்ன இல்லை இங்கே
என் எண்ணம் தவிர

என்ன இல்லை இங்கே
என் அன்னைத் தவிர

என்ன இல்லை இங்கே
அந்த அன்பைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த கனவைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த நினைவைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த நொடியைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
என் கவிதைத் தவிர

என்ன இல்லை இங்கே
இந்த தனிமைத் தவிர


யாதுமாகி நீக்கமற
ஏதுமற்று நிறைந்திருக்குமிந்த
நிகழ்வென்னும் முடிவிலியின்
வியாபித்தலால் இயலே சொல்
என்ன இல்லை இங்கே
என் என்னைத் தவிர?

('லுக்காசுப்பி (கண்ணாமூச்சி)' எனும் 'இரங் தே பஸந்தி' பாடலின் பாதிப்பில் கிறுக்கியது. முக்கியமாக அதில் வரும் 'இங்கே அனைத்தும் இருக்கின்றன இருந்தும் தாயே உணருகின்றேன் நீயின்றி தனிமையாய்' என்ற வரிகள், சொல்லத்தேவையில்லை இரஹ்மானின் இசையில்!)

Saturday, September 06, 2008

மீண்டும்... காதல்! - II

'

சிறகுகளை ஏன் உதிர்த்தாய்,
வெண்புறாக்களும் இன்று
பறக்க மறுத்து
நடை பயிலுகின்றன!

தோட்டத்தில் ஏன் இதழ்பிரியா
புன்னகை சிந்தினாய்,
ரோஜா மொட்டுக்களும் இங்கே
இதழ்திறக்க மறந்தன!

புள்ளிக்கோலம் ஏன் வைத்தாய்,
தென்றலும் இதோ
பூக்களைவிட்டு உன் விரல்சுற்றி

கோலமிடுகிறது
'
நதியினில் ஏன் நீராடினாய்,
புனலும் இதோ
ஆற்றைவிட்டு உன் இல்சுற்றி
குடியிருக்கிறது!

ஞாயிறினும்முன் ஏன் உதித்தாய்,
இரவும் இதோ
காலம்விட்டு உன் ஞாலம்சுற்றி
தவித்திருக்கிறது!
'
'
தலைசாய்த்து ஏன் இமைதட்டினாய்,
இதயம் இதோ
நெஞ்சம்விட்டு உன் விழிசுற்றி
துடித்திருக்கிறது!!

Monday, September 01, 2008

A for Apple....[tag post]

கவிதை எழுதும் பேரில் ஊரை ஏமாற்றியது போதும், ஒழுங்கா இந்த tag' அ எழுதுரவழியப்பாருனு திவ்யா மாஸ்டர் சொல்லியிருக்காங்க. அதுனால வழக்கம்போல இல்லாம மீண்டும் ஒரு கிறுக்கலில்லா பதிவு! அதுக்காக மாஸ்டருக்கு ஒரு நன்றி.

A for Avin
B for Brandy
C for Cigarette
D for Drug...

இருங்க இருங்க பயந்துராதீங்க! இந்த மாதிரி எல்லாம் நாங்க A, B, C, D சொல்லித்திரிந்த காலங்கள் (விளையாட்டுக்குதாங்க) உண்டு. அது ஒரு கனாக்காலம் :( அத பத்தி ரொம்ப யோசிச்சு ஃபீல் பண்ணா அப்புறம் கவிதைனு சொல்லி எதையாவது கிறுக்கத்தான் தோனுது :) ஆனா இதுதான் கிறுக்கலில்லா பதிவாச்சே அதுனால ஃபீலிங்க்ஸ எல்லாம் ஓரமா வச்சிட்டு tag'அ தொடருவோம்
A - http://www.answers.com/

நமக்கு ஆங்கில அறிவு கம்மி, இந்த ஊருல இருக்குறவங்களுக்கு தமிழ் அறிவே இல்ல! அதுனால எல்லா ஆங்கில வார்த்தைகளையும் இதுல பார்த்துதான் அர்த்தம் தெரின்சுக்குறது

B -
https://www.bankofamerica.com/

நான் இங்க இருக்குறதுக்கு இப்போதைய காரணகர்த்தா

C - வராத வார்த்தய வுட்டுரலாம்

D -
http://www.deals2buy.com/

எதுக்குனு உங்களுக்கே தெரியும் :)

E - http://www.enterprise.com/

எடுக்கலாமா வேணாமானு அடிக்கடி வண்டி தேடுற இடம்

F -
http://www.flickr.com/

அன்பர்கள் சுட்டுத்தள்ளும் புகைப்படங்கள் இரசிக்க

G -
http://www.google.com/

எதுனாலும் தேடிப்போவது

H -
http://www.hdfcbank.com/nri/Remittances/

டாலர நாடு கடத்த

I -
http://www.imd.gov.in/

எதோ ஒருமுயற்சிக்காய் ஒருமுறை உதவியது

J -
http://www.jaxtr.com/

உலகெங்கும் பேச

K -
http://www.kissyoutube.com/

படங்கள ஒருகாலத்தில் இறக்குமதி செய்ய உதவியது

L - http://www.lost.com/


Lost Serial பற்றி - அனைத்து எபிஸாடுகளும் பார்த்தாகிவிட்டது. ஸீஸன் 5'க்கு வெயிடிங்!

M -
http://maps.google.com/

விடுமுறை வந்தால் பெருசா பிளான் போடுறதுக்கு உதவுரது(கடைசிவரைக்கும் பிளான் மட்டும்தான் போட்டுருப்போம்)

N - வராத வார்த்தய வுட்டுரலாம்

O -
http://www.ovguide.com/

வெட்டியா நேரத்த ஓட்ட

P -
http://pgportal.gov.in/

இந்தியாவின் மக்கள் குறைதீர்ப்பு பக்கம்!

Q - வராத வார்த்தய வுட்டுரலாம்

R -
http://www.RealPlayer.com/

விளக்கம் தேவையில்லை

S -
http://www.space.com/

அப்பப்ப டைம்பாஸ் பண்றதுக்கு

T -
http://www.tamildict.com/

நமக்கு தமிழ் அறிவும் கம்மி அதுக்குதான் இந்த இடம் :)

U - வராத வார்த்தய வுட்டுரலாம்

V -
http://www.videoembedder.com/

எதுக்குனு நீங்களே கண்டுபுடிச்சிக்கோங்க

W -
http://watch-movies.net/

காசில்லாம படம் பாக்க

X - வராத வார்த்தய வுட்டுரலாம்

Y -
http://www.yahoo.com/

விளக்கம் தேவையில்லை

Z -
http://www.zango.com/

சும்மா டைம்பாஸ்க்கு


அம்புட்டுதான் மக்களேஸ்!!

ஏதோ மூனுபேர மாட்டிவிடனுமாமே! அதெல்லாம் முடியாது, ஏன்னா நமக்கு அவ்வளவு பேரெல்லாம் தெரியாது (மூனுங்கறது அவ்வளவு பேரிய நம்பரான்னு கேக்குரீங்களா ஹி ஹி)

பதிவுலகில் எனக்கு முன்னோடியும், சில கிறுக்கல்கள் முயற்சி செய்துபார்க்கும் ஆர்வம் எனக்குள்ளும் தோன்ற முதற்காரணமுமாய் இருந்தது (அறியாமலே) என் தோழன் ஒருவன். அவன் என்ன மாதிரி இல்ல உண்மையிலேயே நல்ல கவிஞன் இருப்பினும் பதிவுலகில் அத்துனை ஆர்வமில்லாதவன். அதனால அவன மாட்டிவிடுறதே சரி :)நான் அழைப்பது,

மதி

[நண்பர்களே அவனோட பதிவில் நிறைய கமண்டி தோழனை நிறைய கவிதை எழுதவைப்பது உங்க பொருப்ஸ்! வரட்டா :)]

Sunday, August 24, 2008

தொலைவு...


தினமும் கடக்கும்
விடியலில் காத்திருந்தும்
இந்த விடியலிலும்
மலரா மொட்டின்
மூடிய இதழ்களை
தன் மெதுவிரல்களால்
திறக்க முயலும்
மழலையின்
தோல்வி முயற்சியும்
கொண்டிங்கே
உன் தொலைவை
திறக்க முயலாமல்
இந்த விடியலும்
கடந்து போக
மலரா இந்த
இரவின் அகாலத்தில்,
அர்த்தம் தொலைத்த
மெளனத்தின் இரங்கல்
புன்னகையுடன், நான்
தொலைந்து நிற்கின்றேன்...

Saturday, August 16, 2008

புனல் திருடி!!

'

அலையாய் எனை விரட்டப்பார்பாயோ!

ஏ கடலே! கேள்...

உன்னிலிருந்து...

...நீர் கவர்ந்து சென்று,

உனை மணல் கொண்டு மூடுவேன்!!

கிளிக்கிய இடம் : விர்ஜினியா கடற்கரை!

Monday, August 04, 2008

மழைக்காலம்!


அது
தனிமையின்
துயர்கண்டு
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்

அது
தனிமையின்
துணைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்

நினைவுகளின் தூறலில்
நிகழ்வுகளின் சாரல்
மறந்திருந்த
கனாக்காலம்

விட்டுச்சென்ற
புன்னகைகள்
சுமந்தபடி இதழ்கள்

பறித்துச்சென்ற
புன்னகைகள்
வழிந்தபடி விழிகள்

தூறலில் மெய்
கரைந்து கொண்டிருக்க,
பொழியும்
புன்னகையில் சாலை
மறைந்து கொண்டிருந்தது

அது
தனிமையின்
துயர்கண்டு
ஞாயிறு மங்கும்
மாலைக்காலம்

அது
தனிமையின்
துணைகொண்டு
மதி மயங்கும்
மழைக்காலம்!

Tuesday, July 15, 2008

வெறுமை...


கால்தடம் பதியா கடற்கரையின்
மிருதுமணல் தழுவிச்செல்லும்
நுரைகளின் வெடிப்பில்!

கவிபடைக்கும் கண்கள் காணா
கானகத்தின் ஊடே இதழ்மலர்ந்த
பூக்களின் சிரிப்பில்!

நீர்தொலைத்து தொலைந்துபோன
கார்மேகங்கள் சுமந்த
நீலவானின் நீட்சியில்!

முற்றுபெற்ற நிகழ்வுகளின்
முற்றுபெறா நினைவுகளின்
விழிவழி தனிமை நீரில்!

கேட்கநினைத்தும் மொழியாமலே
தொடரும் அழைப்புகளின்
அர்த்தமறைந்த வார்த்தைகளில்!

நூற்றாண்டுகளை கடக்கும்
ஆசையை திணிக்கும்
நகரா இந்த நொடிகளில்!


என எதிலெதிலோ
தேடமுயல்கிறேன்
உயிருணர்த்தும்
சில வலிகளை...

Sunday, June 15, 2008

அறிந்தும் அறியாமலும்!


அறியாததாய் அறிந்தததை
அறிவதற்கு அறியாமலே
அறிவாய் கேட்கப்படுகிறேன்

அறியாமலும் அறிந்ததாய்
அறியாததை அறிவதாய்
அறிவின்றி உரைக்கிறேன்

அறியவைக்கும் ஆவலிருந்தும்
அறியவைப்பதாய் இல்லாமல்
அறிவதற்கு ஏதுமில்லாததாய்
அறிவாய் வார்த்தைகள்

அறியத்துடிக்கும் ஆர்வமன்றி
அறிந்துவைக்கும் அக்கறைகொண்டு
அறியயியலாமல் ஆராய்ந்துகிடக்கிறேன்
அறிவில்லாமல் அவ்வார்த்தைகளை

அறிந்ததை
அறியாததாய் நீயும்
அறியாததை
அறிந்ததாய் நானும்
அருகாமையில்லா எதிர்கரைகளில்

அறிந்தும் அறியாமலும்
அறிந்ததாய் அறியாததை
அறியாமலே அறிவதாய்
அறிவாய் கழிக்கிறோம்
அருகிலமர்த்தும் நமக்குமட்டுமான
அருமையான சிலநொடிகளை...

Monday, May 19, 2008

நீர்தனில்...

'
மழையின் துளிகள்
பிடித்து நடக்கிறேன்

குளத்தின் ஆழம்
குடித்து மூழ்குகிறேன்

நதியின் வேகம்
எதிர்த்து மறைகிறேன்

கடலின் பிரம்மாண்டம்
கண்டு மயங்குகிறேன்

இங்கே பனித்துளியில்
எனை மறைத்து
உயிரின் ஆழம் தேடுகிறேன்

நான் அழகாய்
நீர்தனில் கரைகிறேன்,
இங்கே ஆழமாய்
நீர்தனில் கரைகிறேன்!

Saturday, April 26, 2008

ஆகினாய்...


வரிகளில் உனை வடித்துப்பார்க்கிறேன்
இங்கே கவிதையாகிப்போனாய்

கல்லில் உனை தரிசிக்கத்துடிக்கிறேன்
இங்கே கண்களாகிப்போனாய்

பூக்களில் உனை அலங்கரிக்க ஆசைகொள்கிறேன்
இங்கே தோரணமாகிப்போனாய்

அழகிலெல்லாம் உனை ஆராதிக்க எத்தனிக்கிறேன்
இங்கே இயற்கையாகிப்போனாய்

என்னில் உனை காணவிரும்புகிறேன்
இங்கே நீ நானாகிப்போனாய்

மெய்ஞானம்தனில் உனை கண்டுகொள்ள அலைகிறேன்
இங்கே விஞ்ஞானமாகிப்போனாய்


இன்னும் இயலோடு இசையாகிப்புன்னகைக்கிறேன்
என் கண்ணனே...
இங்கே எல்லாமும் நீயாகிப்போனாய்!

Saturday, April 19, 2008

மலரா!!


மலராமல் நிற்கின்றன
நீர்விட்ட பூக்கள்
காற்றில் மிதக்கும்
கந்ததகங்களில் மூச்சுத்திணறி

முடிக்கப்படாமல்
இறைந்து கிடக்கின்றன
கிறுக்கிவைத்த காகிதங்கள்,
மையிட உதிரமுமின்றி
காய்ந்துகிடக்கும் எழுதுகோல்
'
சற்றுமுன் கைகாட்டி
புன்னகைத்த அன்னை
வின்னிலிருந்து விழுந்த
காலனின் காலடியில்,
வீதியெங்கும் தேடித்திரியும் மழலை

கனவுகள் சுமந்த கவிதைகள்
மணற்குவியலின் மத்தியில்
கசங்கிய பூக்களாய்,
சோலையது பாலையாய்

இரைகள் ஏராளமாயினும்
கழுகுகள் பறக்கக்கூட
வின்னில் இடம்தாரா
போர் மேகங்கள்

உயிர் மட்டும் போதும்
இங்கே கடல்கடக்கும்
முடிவில்லா பயணத்தின் தொடக்கம்

எதிரிகளும் அன்பர்களும்
அங்கே அடையாளம் தெரியாமல்,
முடிவில்லா பயம்தனில் ஈழம்!
'
'
நிலாரசிகன் அவர்களின் இந்த கவிதை மற்றும் நண்பர் கார்த்திக் அவர்களின் இந்த பதிவு மூலம் பார்த்த படம், இரண்டின் தாக்கத்தில் கிறுக்கியது இது!

Saturday, April 12, 2008

அனல்தனில்...


நெருப்பின் விரல்பிடித்து
எழத்துடிக்கிறேன்

அனலின் கதகதப்பில்
பறக்க முயல்கிறேன்

ஆதவனின் தீக்கரம்பற்றி
மிதக்கப்பார்க்கிறேன்

கனலதன் இறக்கைப்பற்றி
விடுதலை வேண்டுகிறேன்

வெந்து சாம்பலாகும்
இயற்கையின் நடுவே
அதை எய்தவிரும்புகிறேன்
'
இங்கே சுடர்வைத்து
எனைக்கொளுத்தி
இருளில் ஒளிந்த
உண்மைகள் தேடுகிறேன்
'
நான் மெதுவாய்
அனல்தனில் உறைகிறேன்,
இன்னும் அழகாய்
அனல்தனில் உறைகிறேன்!

Monday, March 31, 2008

மீண்டும்..... காதல் :)

[எந்த காரணத்துக்காக சென்றேனோ அது நினைத்தபடி போகாததால் (வழக்கம்போல்) திரும்பிவிட்டேன்! அதுபாட்டுக்கு நடக்கும்போது நடக்கட்டும் நாம திரும்பவும் கிறுக்கவேண்டியதுதான் :)]பட்டின் இறகுகள்,
தென்றல் தொடத்துடிக்கிறது...
உன் கண்கள் தழுவிய
என் விரல்கள் போல்


பூவின் இதழ்கள்,
புல்வெளி இஸ்பரிசிக்கத்துடிக்கிறது...
உன் முகம் பதிந்த
என் மார்பு போல்

மஞ்சள் ஆதவன்,
தொடுவானம் ஏந்தத்துடிக்கிறது...
உன் கன்னம் தாங்கிய
என் தோள் போல்


இலைகள் போர்த்தி,
ஈரமணல் நுகரத்துடிக்கிறது...
உன் கூந்தல் மூடிய
என் முகம் போல்

பனித்துளி போர்த்தி,
மொட்டு மலரத்துடிக்கிறது...
உன் இமை மறைத்த
என் விழிகள் போல்

'

'

ரோஜாவின் இதழ்கள்,
இன்னும் சிவக்கத்துடிக்கிறது...
உன் முத்தத்தால்
என் உதடுகள் போல் :)

Monday, March 17, 2008

நிஜம் இரசிக்கும் காலம்...!

'


கனவுகளின் தேசமிது

கற்பனைகள் இனிவாராது,

கவிதைகளின் வாசலது

காற்றும் சற்று தாமதிக்குது,

நினைவுகளின் முற்றம் அது

புன்னகைகளின் தொடர்சியும் அது,

இனி நிஜம் இரசிக்கும் காலம் இது!


கிறுக்கியவரை போதும்!


கற்பனைகளுக்கு வந்தது பஞ்சம், ஏனெனில் நிஜம்தனை இரசிக்கும் காலம் இதோ :)

வரிகளுக்கு சற்று ஓய்வு சொல்லி செல்கிறேன் அதுவரை, கவிதை ஒன்றே கவிபாடும் அழகை கீழே கண்டு இரசியுங்களேன்!

கொள்ளை அழகு...


என் பதிவுகளை இரசித்து வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

அன்புடன்
சதீஷ்

Sunday, March 02, 2008

புன்னகை-தேன் :)


இரவும் பகலும் முத்தமிட்டுக்கொள்ள
விடியல் புன்னகைக்கிறது

ஜன்னலோரமாய் குயில்வந்து பாட
தென்றல் புன்னகைக்கிறது

மெல்லநான் சோம்பல் முறிக்க
தலையனை புன்னகைக்கிறது

கடமைகள் முடித்து குளியல்போட
வெந்நீர் புன்னகைக்கிறது

வாசம் தெளித்து எடுத்து உடுத்த
துணிகள் புன்னகைக்கிறது

தேநீர் அருந்த பாலை காய்ச்ச
சுடும் ஆவி புன்னகைக்கிறது

நாள்தனைதொடங்க கால்கள் பயணிக்க
பாதை புன்னகைக்கிறது

மெதுவாய் தூவும் தூரலில் ஒளிசிதற
வானவில் புன்னகைக்கிறது

பாதையோரமாய் புதிதாய் பூக்கள் மலர
பூவிதழ்கள் புன்னகைக்கிறது

சாலையில் அன்னையின்
பிடியிலிருந்து குதித்தோடும் மழலை
எனைநோக்கி புன்னகைக்க,
அட!!
என் இதழ்களும் இதோ புன்னகைக்கிறது :)

Monday, February 11, 2008

தொலைத்த மௌனங்கள்!

'

கேள்விகள் விடையின்றி கழிந்தன என்னளவில்
கேள்விகளே இங்கில்லை அவளளவில்
இடையில் கடந்திருந்ததோ பரிதாபமாய் காலம்!

கேள்விகளுக்கு உயிரில்லை என்றாள்
இறந்த அவைகளை நான்
இறக்கும்வரை சுமக்கவைத்தாள்

ஆரம்பங்கள் அழகுதான்
அதில் தொடங்குவது புன்னகைகள்,
தொலைந்ததாய் கூறும்போது
எஞ்சுவது நீர்துளிகள் மட்டுமே!

காரணங்கள் அவை அறிவதரிது
முகம் நான் இனி பார்ப்பதரிது
ஓர்முகம் என்றும் அறியாதது!

பாதைகள் மங்கும் தூரம் தூரத்திலில்லை
இருந்தும் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை
கேள்விகள் மீண்டும் உயிர்பெறலாம்
அதுவரை மீண்டும் நான் பேசும் ஊமையாய்!

ஒருமௌனம் கலைய வேறு உரை
ஒருகூண்டு திறக்க வேறு சிறை
இங்கே உரைகளும் சிறைகளும்
மட்டுமே மாறுகின்றன

அவள் தொலைத்தது அங்கே மறுமுகமா
நான் தொலைத்தது இதில் நிகழ்வுகளா
நாங்கள் தொலைத்தது இங்கே காரணங்களா

எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோ
இருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்!

Sunday, February 03, 2008

காற்றில் ஓர் கவிதை!

'
சின்னாபின்னமான கட்டிடங்கள்
சிதறிகிடக்கும் துகள்கள்
எங்கும் தெரிக்கும் குருதிகள்
காதை பிளக்கும் ஓசைகள்

நடக்க எப்போதோ மறந்துபோய்
நில்லா ஓட்டத்தில் என் கால்கள்

தாய்மண்ணின் மானம்காக்க
நான் மௌனம் கலைந்தேன்
இங்கே வீரனெனும் மூடியனிந்தேன்
'
காரணங்கள் நான் அறியேன்
அது ஆள்பவர்களின் கவலை
உயிர் குடிக்க வந்தேன்
என்னுயிர் துறக்கத் துனிந்தேன்

சிதறிய துகள்களில் தாவிவிரைந்தேன்
பதறிய என்னுள்ளத்தை ஆற்றதுடித்தேன்
இடரிய முகங்களை கொன்றுகுவித்தேன்

பறக்கும் தோட்டாக்கள் என்மார்பை பிளக்க
இதயம் இதற்குமேல் துடிக்க மறுக்க
என்கால்கள் கூட நிலைகொண்டுவீழ
வீழ்ந்துகிடக்கிறேன் புழுதியில்
மூழ்கிக்கிடக்கிறேன் என்குருதியில்

உனக்காய் என்பணி நான் செய்தேன்
எனக்காய் நாடே ஒன்று செய்வாயோ!

ஈன்றவளிடம் போய் சொல்
உன்மகன் தாய்க்குத்தாயான
நாட்டின் மானம் காத்தவனேன்று

பெற்றவரிடம் போய் சொல்
உன்பிள்ளை ஊருக்காக உயிர்தந்து
பெருமை சேர்த்தவனென்று

என்னவளிடம் போய் சொல்
உன்னவன் உனக்காக சேர்த்தது
களத்தில் சிகப்பு பூக்களென்று

என்மைந்தனிடம் போய் சொல்
உன்தந்தை உனக்கு கற்றுதந்தது
வாழ்விலென்றும் துணிச்சலென்று

விரல்கள் அசையமறுக்க
கண்களில் பார்வைமங்க
எஞ்சிய என்னுயிர் கொண்டு
காற்றில் ஓர் கவிதை வறைகிறேன்
தென்றலே அதை நீ சற்று
சேருமிடம் சேர்ப்பாயோ!

Sunday, January 27, 2008

ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!

'
மனதில் உதிக்கும் வார்த்தைகளை வரிகளாக அடுக்கி வைக்கும் ஒரு பதிவேடாக மட்டுமே இன்றுவரை என் வலைப்பதிவு இருக்கிறது.

முதன்முறையாக "ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!" என்று சில பத்திகள் என்னை எழுத வைத்த திவ்யாவிற்கு முதலில் நன்றி! நான் கிறுக்கியவைகளைப்பற்றி எழுத நல்ல சந்தர்ப்பம்.

கொஞ்சநாளாய் அடுத்து என்ன எழுதலாம் என்று யோசித்தால் எதுவும் தோன்றவில்லை! சரி என்றாவது ஏதாவது தோன்றினால் பார்த்துகொள்ளலாம் என்றிருந்தால் அந்த நேரம் பார்த்து தொடர் ஓட்டம் என்று என்னை இழுத்துவிட்டுவிட்டார்.

"உன் குழந்தைகளில் எது உனக்கு மிகவும் பிடித்தது என்று கேட்டால் என்னசொல்ல?", என்றெல்லாம் வசனங்கள் பேசினால் தாய்மையை வைத்து க(வி)தை எழுதிய திவ்யா என்னை அடிப்பார்!

2007'ல் நான் எழுதியவற்றில் எதை மிகமிக விரும்பினேன்?

இயற்கையோடு ஐக்கியமாகிவிட ஆசைகொண்டு இயற்கை எய்தவேண்டுமென்று நான் எழுதிய 'இயற்கையே என்னில் வா'

நண்பர்களின் ஆழமான காயங்களின் பாதிப்பை அருகிலிருந்து உணர்ந்ததன் விளைவாய் உதித்த 'உனக்கு பிறகான நாட்களில்'

சிலஇரவுகளில் நமை தூங்கவிடாது அதிர்வூட்டும் கனவுகளைப்பற்றி எழுதும் ஆவலில் கிறுக்கிய 'இருளில்'

அயல்தேசம் அரவணைத்தாலும் தனிமை உணர்வுகளின் பாதிப்பில் தோன்றிய 'டாலர் கனவுகள்' மற்றும் 'என் ஜன்னலோரம்'!

எழுதிவிட்டு பதியாமலே போன என் நீண்ட கிறுக்கலொன்று!

எதை சொல்ல...

முடிவில்லா பயணத்தைப்பற்றி எனக்குள் தோன்றிய எண்ணங்களில் உதித்த 'பயணத்தில்' சென்ற வருடம் எழுதிய சொற்ப பதிவுகளில் மிகமிக ஆழ்ந்து எழுதிய ஒன்று. மாலை மயங்கும் நேரமும், தொடரும் சில சிந்தனைகளின் பாதிப்பும், தனிமையில் நான் போய்கொண்டிருந்த அவ்வேளையுமாய் என்னை எழுதத்தூண்டியதன் விளைவே அந்த வரிகள்! அதை படிப்பவர்களுக்கு அதன் அர்த்தம் முழுமையாய் புரியுமா என்று அறியேன், நானே அதன் அர்த்தத்தை இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன்! 2007'ல் நான் எழுதியதில் அதுவே எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதுகிறேன்.


நான் எழுதிய அனைத்திலும் என்றுமே மிகவிரும்புவது 'நினைவுகள்'. தன்னுடனான நினைவுகளைப்பற்றிக்கேட்டு தன்னையும் அறியாது என்னை முதன்முதலாய் முழுநீளக்கவிதை எழுதவைத்தவர் எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அற்புதமான என் தோழி ஒருவர். என் கண்களுக்காக மட்டுமே சில வரிகள் கிறுக்கிகொண்டிருந்த நான் முதன்முதாலாய் இன்னொருவரின் பார்வைக்காக ஆவலுடன் எழுதியது 'நினைவுகள்'! அவரின் பாராட்டுதலே வலைபதிவு தொடங்க நம்பிக்கை தந்தது.

பி.கு: வலைபதிவில் உள்ள 'நினைவுகள்' நான் பொதுவாக எழுதிய ஒன்று.

தொடர் ஓட்டத்தில் இழுக்க ஐந்து பேர் எல்லாம் எனக்கு தெரியாதே, வலையில் என்னை தெரிந்திருப்பதே ஐந்து பேர் தானே!!

நான் தொடர் ஓட்டத்திற்கு அழைப்பது,

1. தினேஷ்
2. இரசிகா
3. நித்யா

Sunday, January 13, 2008

மல்லிகை இரவுகள்...


பூமியின் ஈர்ப்பை எதிர்த்தபடி
இனியும் முடியாது என்றபோதும்
உன்முகம் காணும் காரணத்தால்
கரங்கள் சிவக்க முயற்சியைவிடாமல்
மெதுவாய் ஆதவன் கீழ்சாயும்காலம்

உனைபார்த்தபடி நான்
விழிகள் மட்டும் பார்த்தபடி நீ!
'
தொலைவில் பறக்கும் குயில்கள்
எழுப்பும் இனிய காணத்தை
சுமந்து நமைகடக்கும் காற்றின்
அலைகளுடன் கலந்து
அதனினும் இனிமையாய்
ஒலிக்கும் உன்பேச்சு
'
பேசுவது விழிகளா இல்லை
அசையும் உன் உதடுகளா
என்பதை என் விழிகள்
அறிந்த போதிலும்
உதடுகளையே இரசித்தன!
'
உதடுகள் இமைக்கமறந்த
பொழுதில் உணர்ந்தேன்,
வளையல்களில் ஒன்றோ
எனத்தோன்றும் உன்கைகடிகாரம்
கடந்துசெல்லும் உணரமுடியாத
காலத்தைகாட்டி சிரிப்பதை!

கவனித்தவளாய் 'நேரமாகிவிட்டது
பிறகுபார்க்கலாம்' என்று
உன் வழிநோக்கித்திரும்பினாய்
'
நீ திரும்பும்முன் சற்றேகவனித்தேன்,
குளித்துவிட்டு கூந்தல்துடைத்து தலைசீவி
நடுவாய் வைத்திருந்த வகுடை!
திரும்பியபின் அழகாய் தரிசித்தேன்,
இறையைதொழுது சூடியிருந்த மல்லிகையை!
'
நீயும் கடந்ததால்
உனை காணாது
வலுவெல்லாம் இழந்து
கதிரவன் வீழ்ந்தது,
மாலை மறைந்தது
மதியும் எழுந்தது
'
வகுடாய் என்னையும்
மல்லிகையாய் உன்னையும்
உன்னிடத்தில் வைத்துக்கொண்டாய்
பிரிக்கும் கூந்தல் பகுதியாய்
இந்த காரிரவு நம்மிடையே!
'
மல்லிகை நிலவை வகுடாய்
அணிவகுத்து நின்ற நட்சத்திரங்கள்
இப்பொழுது சூழ்ந்து நிற்கின்றன!

அதுபோல் கூந்தலைவென்று
வகுடு மல்லிகையை சூழும்
மல்லிகை இரவுகள்
தூரத்தில் தெரியும் நம்பிக்கையில்,
கடந்து செல்லும் இந்த
தனிமை இரவுகளை
நான் கவிதையில் களிக்கிறேன்...