செவ்வாய், டிசம்பர் 25, 2007

பூக்களில் உறங்கும் மௌனங்கள்


புரிந்தபோதும் புரியவைக்க இயலா
சுயத்தின் சிந்தனைகள்

தீட்ட விரும்பி வரையாது
கிழித்த ஓவியங்கள்

வடிக்க நினைத்து எழுதாது
அழித்த வரிகள்

மொழிய நினைத்து பேசாது
ஊமையான வார்த்தைகள்

சந்திக்க நினைத்து பார்க்காது
மறைந்த முகங்கள்

தொண்டைக்குள் சிக்கி கடைசிவரை
வெளிவரமறுத்த விருப்பங்கள்

என் பிழைக்கு தண்டனை ஏற்றபோதும்
இதழ் திறக்கா நண்பனின் காரணங்கள்

அவளின் கேள்விகளுக்கான பதிலை
மொழியாமலே கடத்திய நொடிகள்


என மனதின் ஆழத்தில்
மலராது போன பூக்களே
உங்களில் உறங்கும் மௌனங்கள்
என்னுள் இனியேனும் விழிக்கட்டும்

ஞாயிறு, டிசம்பர் 23, 2007

கனவே!


மூடிய இமைகளுக்குள்
காட்சிகள் மறைந்து போக
நிஜம்போல் நிழல்தனை
காட்டிய என் கனவே

நிஜமது மீண்டும்
ஒருமுறை வேண்டும்
விழிகளுக்குள் வாராய்
என் கனவே

வருவாய் என
துயில்தனில் விழித்திருக்கிறேன்
தருவாய் என
விழிகளுக்குள் பார்த்திருக்கிறேன்

சிப்பிக்குள் அரிதாய்
உதிக்கும் முத்து,
அதனினும் அரிதாய்
இமைகளுக்குள்
உதித்த கனவே
தேடுகிறேன் இன்று

நிழல் தரும் நிழலை
நிரந்தரமாக்கிப்போவாய்
என காத்திருக்கிறேன்
உறக்கத்தில்

வந்துவிடு
ஒரே ஒருமுறை,
நான் மீளா
துயில் கொள்ளும்முன்...

வெள்ளி, டிசம்பர் 14, 2007

டாலர் கனவுகள்!


ஈன்றவளின் குறலின்றி கண்ணயர்ந்ததில்லை
இன்றோ தொலைபேசியை எடுக்க
டாலரை கணக்கிடும் மனம்!
பெற்றவரை தொலைவில் விட்டு
இங்கே சில கனவுகளில்

கடல்கடக்கும் சகோதரனுக்காய்
வேலை பலுவின் மத்தியிலும்
'ஷாப்பிங்' செய்த அண்ணன்
உறவுகளை கடந்து வந்து
இங்கே சில கனவுகளில்

பிரியும் தினம் அறிந்த போதிலும்
மீண்டும் மீண்டும் கேட்கும் அறைநண்பர்கள்
நண்பர்களின் அரவணைப்பை தாண்டி
இங்கே சில கனவுகளில்

விருந்துகள் கொடுத்து மகிழ்ந்தாலும்
உலாபேசியில் பூரித்தாலும்
உள்ளார்ந்த பயம்தனை காணத்தவறா தோழமை!
தயக்கங்களை மூட்டைகட்டி
இங்கே சில கனவுகளில்

நண்பர்கள் வழியனுப்ப,
முகம் தெரியா தோழி
வாழ்த்துக்கள் கூரியனுப்ப,
ஈரப்புன்னகைகள் சுமந்தபடி
இங்கே சில கனவுகளில்

உறவுகளிடம் சொல்லிவிட்டு
உரிமைகளிடம் சற்றுகலங்கிவிட்டு
கண்டங்கள் கடந்துவந்து,
அழகாய் புன்னகைக்கும் சிகப்பு மனிதர்களின்
மத்தியில் வியப்பாய் வியக்கிறேன்

தாய்தேசத்தை நினைவில் விட்டு
பூமிபந்தில் பாதிதூரம் கடந்திந்த
டாலர் தேசத்தில் கேளாமலே தொடர்கிறது
எனதிந்த டாலர் கனவுகள்.....

சனி, டிசம்பர் 08, 2007

என் ஜன்னலோரம்...


என் ஜன்னலோரம் பூக்கும் ரோஜாவே
தனிமை இரவு இது
துயிலும் நகரம் இது
விழித்திருப்பது நீயும் நானும்

அந்நிய பூமி இது எனை
அந்நியனெனும் தேசம் இது
அன்யோன்யமாய் நீ மட்டும்
அன்பு ரோஜவே

தொலைவாய் வந்தாலும் முகம்
தொலைந்து போய்விடாமல்
தொல்லை கொடுக்க
தொலைவில் இருந்து
உன்னை அனுப்பினாளோ

கூந்தலின் வளவளப்பில்
வழுக்கிவிழும் பயத்தில்
பற்றிக்கோள்ள முட்கள் கொண்டாயோ
அதே பயத்தில்தான் விரல்களில்
சற்றே நகங்கள் கொண்டேன்

பிரிந்தபோதும் பிரியாததாய் பிரிந்த
தருணத்தில் அவள் கண்களில் கொண்ட
கண்ணீர்துளி போல் உன் இதழ்களில்
ஏந்திய பனிதுளியும் ஏனோ

ஞாபகங்களை மறக்க
நினைவுகளை கடந்து வந்தேன்
நினைவுகளை மீண்டும் ஞாபகங்களாக்கி
எனை கொல்வதும் ஏனோ

விடியல் விளிக்கும் நேரமிது
நகரம் இன்னும் விளிக்கவில்லை
நாமோ இன்னும் துயிலவில்லை
மலர்ந்து கொண்டிருக்கிறோம் ரோஜாவே

பொழுதும் விடிந்தது
நாளும் மலர்ந்தது
உடன் நாமும் ரோஜவே

சற்றே சென்று நாளின்
முடிவில் திரும்புகிறேன்
என் ஜன்னலோர ரோஜாச்செடியே
அதுவரை காத்திரு
நாம் இரவில் மீண்டும் மலர்வோம்...