நவிரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவிரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 15, 2018

நல்லை அல்லை


நவிரம் துளைக்கும்
கதிர் மழை
ஞாயிறே நீ
நல்லை அல்லை

இணை சுடும்
வெயில் போர்வை
ஆதவனே நீ
நல்லை அல்லை

நல்இரவு குளிர்விரட்டி
தீம்பகல் புகுத்தும்
பகலவனே நீ
நல்லை அல்லை

துளி துளைத்து
வான்வில் வறையாய்
கதிரே நீ
நல்லை அல்லை



புதன், மே 14, 2014

மழலை

அவன் உதிர்க்கும் புன்னகையில்
உதிர்ந்து போகின்றன
என் குழப்பங்கள்...

அவன் வீசும் பார்வையில்
வீசி எறியப்படுகின்றன
என் வலிகள்...

அவன் முறிக்கும் சோம்பலில்
முறிந்து போகின்றன
என் அயர்வுகள்...

சனி, செப்டம்பர் 07, 2013

எழு ஞாயிறு

 

அவன் இதழ் தொட்டு எழும் என் விடியல்கள்
அவன் பார்வை தொட்டு எழும் என் இமைகள்
அவன் மேனி தொட்டு எழும் என் பகல்கள்
அவன் புன்னகை தொட்டு எழும் என் காலைகள்
அவன் விரல் தொட்டு எழும் என் ஞாயிறுகள்

எழு ஞாயிறு எழு
என் ஞாயிறு எழுந்துவிட்டான்...

சனி, ஜனவரி 05, 2013

நவிரம்




வையகம் காத்திருக்கின்றது உன் பாதம் தாங்க
தென்றல் காத்திருக்கின்றது உன் சுவாசம் ஏந்த

வெளியது காத்திருகின்றது உன் ஆச்சர்யங்கள் சேர்க்க
இயலது காத்திருகின்றது உன் வியப்புகள் அடுக்க

பூக்கள் காத்திருகின்றன உன் வாசம் வீச
கவிதைகள்  காத்திருக்கின்றன உன் வரிகள்  ஏற்க

நிகழ்வுகள் காத்திருக்கின்றன உன் கனவுகள் சேர்க்க
கனவுகள்  காத்திருக்கின்றன உன் காலங்கள் கோர்க்க

சிகரங்கள் காத்திருக்கின்றன நீ நவிரம் தொட
யாவரும் காத்திருக்கிறோம் மழலை உன் மெய் கான