வியாழன், மார்ச் 15, 2018

நல்லை அல்லை


நவிரம் துளைக்கும்
கதிர் மழை
ஞாயிறே நீ
நல்லை அல்லை

இணை சுடும்
வெயில் போர்வை
ஆதவனே நீ
நல்லை அல்லை

நல்இரவு குளிர்விரட்டி
தீம்பகல் புகுத்தும்
பகலவனே நீ
நல்லை அல்லை

துளி துளைத்து
வான்வில் வறையாய்
கதிரே நீ
நல்லை அல்லைதிங்கள், ஜூலை 11, 2016

இழப்போம்


பேராசை இழப்போம்
பெரும்ஆசை இழப்போம்

அசுரம் இழப்போம்
அறியாமை இழப்போம்

வாட்டம் இழப்போம்
வேதனை இழப்போம்

மிடிமை இழப்போம்
அடிமை இழப்போம்

அச்சம் இழப்போம்
நேர்எதிர்மை இழப்போம்

எல்லைகள் இழப்போம்
எதிரிகள் இழப்போம்

வறுமை இழப்போம்
இன்மை இழப்போம்

மாசு இழப்போம்
மடமை இழப்போம்

கயமை இழப்போம்
குழப்பம் இழப்போம்

வன்மம் இழப்போம்... தோழர்களே

நாம் துன்பம் இழப்போம்!

ஞாயிறு, அக்டோபர் 04, 2015

நம்பிக்கை

வேலியோ சரிந்தது
மேய்ந்தவரோ தீர்ப்பாளர்

நெருப்பிற்கு உடல் வார்த்தோம்
விடுதலைக்கு உயிர் வார்த்தோம்

விண்ணிடம் கேட்டோம்
மண்ணிடம் மன்றாடினோம்

விண்ணும் காக்கவில்லை
மண்ணும் மடுக்கவில்லை

தட்டினோம் ஞாலத்தின் கதவுகளை
திறந்தன சன்னல்கள் தடுப்புகளோடு

அறத்தினும் முக்கியமாம் புவிஅரசியல்
நியாயத்தினும் அவசியமாம் வாணிபம்

கனவுகளை சிதைத்தீர்
உரிமைகளை தடுத்தீர்

எத்தனை நாடகம்
எத்தனை ஏமாற்றம்

எத்தனை துரோகம்
எத்தனை வஞ்சகம்

இத்தனை கழிப்பிலும்
இத்தனை அழிப்பிலும்
இன்னும் கனன்றுகொண்டுதானிருக்கிறது
எம் நம்பிக்கை... ஈழம்!


  

புதன், மே 14, 2014

மழலை

அவன் உதிர்க்கும் புன்னகையில்
உதிர்ந்து போகின்றன
என் குழப்பங்கள்...

அவன் வீசும் பார்வையில்
வீசி எறியப்படுகின்றன
என் வலிகள்...

அவன் முறிக்கும் சோம்பலில்
முறிந்து போகின்றன
என் அயர்வுகள்...

சனி, செப்டம்பர் 07, 2013

எழு ஞாயிறு

 

அவன் இதழ் தொட்டு எழும் என் விடியல்கள்
அவன் பார்வை தொட்டு எழும் என் இமைகள்
அவன் மேனி தொட்டு எழும் என் பகல்கள்
அவன் புன்னகை தொட்டு எழும் என் காலைகள்
அவன் விரல் தொட்டு எழும் என் ஞாயிறுகள்

எழு ஞாயிறு எழு
என் ஞாயிறு எழுந்துவிட்டான்...

சனி, ஜனவரி 05, 2013

நவிரம்
வையகம் காத்திருக்கின்றது உன் பாதம் தாங்க
தென்றல் காத்திருக்கின்றது உன் சுவாசம் ஏந்த

வெளியது காத்திருகின்றது உன் ஆச்சர்யங்கள் சேர்க்க
இயலது காத்திருகின்றது உன் வியப்புகள் அடுக்க

பூக்கள் காத்திருகின்றன உன் வாசம் வீச
கவிதைகள்  காத்திருக்கின்றன உன் வரிகள்  ஏற்க

நிகழ்வுகள் காத்திருக்கின்றன உன் கனவுகள் சேர்க்க
கனவுகள்  காத்திருக்கின்றன உன் காலங்கள் கோர்க்க

சிகரங்கள் காத்திருக்கின்றன நீ நவிரம் தொட
யாவரும் காத்திருக்கிறோம் மழலை உன் மெய் கான

சனி, ஜூலை 28, 2012

முகை


அரும்பாய் தோன்றி
மொட்டாய் உருவெடுத்து 
முகையாய் பிறந்தவனே
மலர்வாய் அலர்வாய்
அலராய் என்றும் மனம்வீசுவாய்