வெள்ளி, டிசம்பர் 29, 2006

ஏமாற்றங்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விடிவெள்ளியின்
தரிசனத்திற்காக
முன்னிரவிலிருந்து
விழித்திருந்து
உச்சகாட்சியில்
கண்கள் மூடிவிட்ட
விடிகாலை... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆசையாய்
மத்தாப்பு கொளுத்த
வேகமாய் வர
தீபாவளி இரவில்
முந்திக்கொண்ட மழை... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விளையாட்டாய்
பிடித்து வைத்து
பின்மனமிறங்கி
விடுவித்தபோது
உயிர் விட்டிருந்த
பட்டாம்பூச்சி... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கேட்க நினைத்த கேள்விகள்,
யூகித்திருந்த பதில்கள்,
பேச துடித்த வார்த்தைகள்,
எதுவுமே மொழியப்படாமல்
அந்த கடைசி மாலையில்
அவளை இழுத்து சென்ற இரயில்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மனதில் ஆழமாய் 
வேர்கொண்டும்
முளைக்க நீரின்றி
முடங்கிப்போன
கனவுவிதைகள்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ - தொடரலாம்...

வெள்ளி, டிசம்பர் 08, 2006

வெளி


அந்த அழகிய இயற்கை அன்னையின் மடியில்
இதோ நான்...

தென்றலின் நாதமதற்கு இசை பாடும்
குயிலின் கீதமதற்கு நடனமாடும்
புல்லின் மெத்தை தனில் இதோ நான்...

வியக்கிறேன் அந்த படைப்பை அதன் படைப்பாளியை
அந்த தோற்றத்தை அதை தோற்றுவித்தவனை
அந்த கவிதையை அதன் கவிஞனை
அந்த அழகை அதை கொண்ட அந்த வெளியை...

கவிஞனே உன் முகம் காட்டு
உன் கவிதையின் முழு பொருள் காட்டு
படைப்பாளியே உன் தோற்றம் கூறு
உன் படைப்பின் முழு தேற்றம் கூறு

விடையின்றி தவிக்கிறோம்
கேள்விகளுக்கு விடையாக கேள்விகளே கிட்ட
இன்னும் தேடுகிறோம்...

வியக்கிறோம் அந்த விண்வெளியை
அதில் பயனிக்கும் மண்டலங்களை
அதில் சுற்றும் குடும்பங்களை
அதில் உலாவும் கோள்களை
அதில் உறையும் ஜீவன்களை
அத்தனையும் எத்துனை அழகு!

கவிதை தந்த பரம்பொருளே
உன் பிறப்பை தேடுகின்றோம்
கவிதைக்கு வடிவம் தந்த பிரம்மமே
உன் வடிவம் தேடுகின்றோம்
கவிதைக்கு பொருள் கொடுத்த முழுமுதர்பொருளே
உன் பொருள் தேடுகின்றோம்

அனைத்துக்கும் விதிகளை விதித்தவனே
அந்த விதிகளின் விதியை தேடுகின்றோம்
அந்த விதிக்கான தேற்றமதனை தேடுகின்றோம்

அந்த முழுதேற்றம் கண்டெடுப்போம்
அதுவரை நாங்கள்... தேடியிருப்போம்!

திங்கள், டிசம்பர் 04, 2006

அன்பின் நிலையிலே...


சொல்லித்தெரிவதில்லை நட்பு நிலை
சொல்லாமல் தெளிவதில்லை காதல் நிலை

பார்வையில் பிறப்பதரிது நட்பு நிலை
பார்வையில் கூட மலர்வதுண்டு காதல் நிலை


காலமதன் ஓட்டத்தில் இனிய நினைவுகளாய்
தொடர்பற்று போகலாம் நட்பு நிலை
காலமதன் ஓட்டத்தில் அழகிய நிகழ்வுகளாய்

தொடர்ந்தோடலாம் காதல் நிலை

நில்லாது தொடர்ந்தால் வாழ்வில்
புன்னகை சேர்க்கலாம் நட்பு நிலை
தொடராது நின்றால் மனதில்
வற்றா கண்ணீராகலாம் காதல் நிலை

விட்டுகொடுத்தல் மாற்றிக்கொள்ளல்
தேவையற்று
அழகிய புரிதலில் செல்லும் சிறந்த நட்பு நிலை
விட்டுகொடுத்தும் சிலமாறுதல்கள் கண்டும் புரிதலை

கடந்த மேல்நிலையில் செல்லும் சி
றந்த காதல் நிலை

தொடநினைக்காவிட்டாலும் சில சமயங்களில்
தொட்டுபேசுவது அவசியமாகலாம் - நட்பு நிலை
தொடநினைத்தாலும் தள்ளி தொடாமல் பேசுவது
எப்போதும் அழகாகும் - காதல் நிலை

எனக்கு நீ உனக்கு நான் அழகாய் தேவை
என்று அன்பாய் செல்லும் நட்பு நிலை
எனக்கு நீ உனக்கு நான் என்றல்ல
நமக்கு நாம் நிச்சயமாய் தேவை
என்ற புரிதலில் செல்லும் காதல் நிலை

விதிகளை உணர்ந்து அதை மீறாது
அமைதியாய் செல்லும்
உன்னத நட்பு நிலை
விதிகளை அமைத்து அதை தாண்டாது

அழகாய் செல்லும் தூய காதல் நிலை

பலமுறை பலருடன் பல நிலைகளில்

வரும் இனிய நட்பு நிலை
ஒருமுறை ஒருவருடன் மட்டுமே
ஒரு நிலை
கடந்தே வரும் முதிர்ந்த காதல் நிலை

வாழ்கை பயணத்தில் முக்கிய நிகழ்வுகளை
அழகாய் பகிர்ந்து செல்லும் நெருங்கிய நட்பு நிலை
வாழ்கை பயணத்தின் முக்கிய பாதையை
அழகாய் பகிர்ந்து செல்லும் தேர்ந்த காதல் நிலை

அன்பும் அரவணைப்பும் இரண்டிலும் குறைவதில்லை
சற்றே உரிமை, பெரிதாய் தவிப்பு, அன்பாய் ஏக்கம்,

அழகாய் வெட்கம், அமைதியாய் எதிர்பார்ப்பு...
தவிர வேறுபாடு வேரில்லை

அதனதன் நிலைகளில் உன்னதமானவை
அதனதன் பரிமானங்களில் புனிதமானவை

வாழ்கை பயணத்தில், அறிவாய் வழிகாட்டி செல்லும்
நல்ல நட்பு நிலை
வாழ்கை பயணத்தில், அழகாய் அழைத்து செல்லும்
நல்ல காதல் நிலை


ஆதலால்...
நட்பே உனை வணங்குகிறேன்,
காதலே உனை போற்றுகிறேன்...

சனி, டிசம்பர் 02, 2006

துளிகள் II

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இல்லை

கற்பனைகள் மட்டுமே
கவிதைகளில் வருமாயின்
எங்களின் வார்த்தைகளில்
கனவுகள் இல்லை...

அனுபவங்கள் மட்டுமே
கவிதைகளாகுமாயின்
எங்களின் வரிகளில்
நிகழ்வுகள் இல்லை...

காதல் செய்தால் மட்டுமே
கவிதைகள் தோன்றுமாயின்
எங்களின் எழுத்துக்களில்
காதல் இல்லை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வருவதில்லை

சூழும் பனியை தீ மூட்டி சுட்டபோது
தொலைவில் நடுங்கும் நாய்குட்டியை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

இலையில் கசிந்த பனிநீரை ருசித்தபோது

மலர துடித்து பனியில் உறைந்த மொட்டை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

சொகுசு பேருந்தில் சொகுசாய் பயணிக்கும்போது

ஜன்னலின் அருகே கையேந்தும் சிருமியை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

நிஜமொன்று இருக்கும்
போதும்
நிழல் மட்டும் சொந்தமாவதை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !


எனக்கு ஒரு கவிதை எழுத வருவதில்லை !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவள்

அவள் - தூரும் மழையின் சாரலை
ஜன்னலோரமாய் இரசிக்க வைத்தவள்

அவள் - வானவில்லின் வண்ணங்களில்
என்னை ஓவியம் தீட்டவைத்தவள்

அவள் - என் தாய்மொழியில்
என்னை கவிஞனாக்கியவள்

அவள் - பூக்களின் மேல் என்னை
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாக்கியவள்

அவள் - காரணங்களின்றி என்னை
புன்னகை சிந்த வைத்தவள்

அவள் - பூவின் இதழ்களை வருடக்கூட
எனக்குள் பயம் கொடுத்தவள்

அவள் - பின்னொரு மாலையில் கண்களை
வற்றா நீர்தேக்கமாக்கிப்போனவள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

- தூரல் தூவும்...