வியாழன், நவம்பர் 19, 2009

பகடி


இருள்முகம் கொண்டு புதுநிலவு
கருமை போர்த்திய நீலவானில்
தவழும் இப்பொழுதில் பால்வீதி
கண்டு கிடக்கிறேன்...

முன்தின இரவின் கனவொன்றில்
வென்தாரிகை கருந்திரை கிழித்துவந்து
மறுஇரவில் கதைத்திருப்பதாய் உரைத்ததால்
வெளிகண்டு கிடக்கிறேன்...

அதோ அவள்! கீற்றாய் மறைந்தாள்
உதிக்கும்முன் கறைந்தது புன்னகை
அதோ அங்கே, இதோ இங்கே
அங்கிங்கெனாதபடி திரைகிழிசல்களாய்
மிளிர்கிறாள்

அவள் லீலைகள் கண்டுவியக்கிறேன்!
அவள் களிகண்டு கிடக்கிறேன்,
அவள் வாக்கு வெறும் பகடி என்றறியாது...
'
'
P.S: சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த 'Leonoid' வின்கற்கள் பொழிவை எண்ணி கிறுக்கியது

புதன், மே 13, 2009

இலையுதிரா காலம்


முடிவற்ற கரைதனில்
மீய்ந்துகிடக்கும் அலைகளை
அள்ளி பருகுகிறேன்
தீர்வதாயில்லை தாகம்

கவிதைகள் சேகரித்த
காகிதங்கள் எரித்து
அனல் சேர்க்கிறேன்
காய்வதாயில்லை குளிர்

அரிமாவாய் வென்ற
இரைதனை காகமாய்
கொத்தி உன்கிறேன்
அடங்குவதாயில்லை பசி

ஆழிப்பேரலைகள் சுமக்கும்
சூராவளி காற்றாய்
பலம்கொண்டு ஈர்க்கிறேன்
உதிர்வதாயில்லை இந்த சிற்றிலை!

வெள்ளி, மார்ச் 06, 2009

கனவுகள்

இமைகள் வழியே
வழிந்து நிற்கும் க‌ன‌வுகளை
தலை‌ய‌னை வழியே
ஒழுகவிட்டு விழிக்கிறேன்

ச‌ன்னல் திறைவிலக்கி
கதிரவனின் ஒளிகொண்டு
அறையில் நிரம்பியிருக்கும்
இருள் துடைத்தெடுக்கிறேன்

ஆதவனின் கரம்பட்டு
மலரும் பூக்கள்
வாடையற்றுகிடக்கும் காற்றை
மணம்வீசும் தென்றலாய் மாற்ற‌
புன்னகைக்கிறேன்

இமைக்கும் பொழுதில்
நிகழ்ந்து போகும் நிகழ்வுகள்
வெற்றிரவுகளில் இமைகளுக்குள்
வந்து வழிந்து நிற்கின்றன‌

சில நினைவுகள் இப்படித்தான்
சில நிகழ்வுகள் இப்படித்தான்
சில கனவுகள் இப்படித்தான்
இமைதட்டும் சிறுநொடிக்குள்
இதழ்மலர்ந்து மறைகின்றன‌...

புதன், ஜனவரி 07, 2009

இடைவெளி...


வடிவமைத்த‌ எழுத்துக்கள்
கோர்த்தமைத்த வார்த்தைகள்
சேர்ந்தமைத்த‌ வரிகள்
நிரம்பமைந்த கவிதை
சுமந்த வெள்ளைத்தாள்
தாங்கிய தென்றலில்
படரும் சுகந்தத்தை
உரிமைகொண்டாடும் மலர்கள்
ஏந்திய முன்பனிகளை
செங்கதிரால் மெல்ல உருக்கும்
அதிகாலை ஆதவனின்
அழகிய உதயம் கண்டு
மறந்துவிட்டிருந்தது நிகழ்வுகளை மட்டுமல்ல‌
நிறைந்திருக்கும் நினைவுகளையும்தான்...