செவ்வாய், டிசம்பர் 25, 2007

பூக்களில் உறங்கும் மௌனங்கள்


புரிந்தபோதும் புரியவைக்க இயலா
சுயத்தின் சிந்தனைகள்

தீட்ட விரும்பி வரையாது
கிழித்த ஓவியங்கள்

வடிக்க நினைத்து எழுதாது
அழித்த வரிகள்

மொழிய நினைத்து பேசாது
ஊமையான வார்த்தைகள்

சந்திக்க நினைத்து பார்க்காது
மறைந்த முகங்கள்

தொண்டைக்குள் சிக்கி கடைசிவரை
வெளிவரமறுத்த விருப்பங்கள்

என் பிழைக்கு தண்டனை ஏற்றபோதும்
இதழ் திறக்கா நண்பனின் காரணங்கள்

அவளின் கேள்விகளுக்கான பதிலை
மொழியாமலே கடத்திய நொடிகள்


என மனதின் ஆழத்தில்
மலராது போன பூக்களே
உங்களில் உறங்கும் மௌனங்கள்
என்னுள் இனியேனும் விழிக்கட்டும்

ஞாயிறு, டிசம்பர் 23, 2007

கனவே!


மூடிய இமைகளுக்குள்
காட்சிகள் மறைந்து போக
நிஜம்போல் நிழல்தனை
காட்டிய என் கனவே

நிஜமது மீண்டும்
ஒருமுறை வேண்டும்
விழிகளுக்குள் வாராய்
என் கனவே

வருவாய் என
துயில்தனில் விழித்திருக்கிறேன்
தருவாய் என
விழிகளுக்குள் பார்த்திருக்கிறேன்

சிப்பிக்குள் அரிதாய்
உதிக்கும் முத்து,
அதனினும் அரிதாய்
இமைகளுக்குள்
உதித்த கனவே
தேடுகிறேன் இன்று

நிழல் தரும் நிழலை
நிரந்தரமாக்கிப்போவாய்
என காத்திருக்கிறேன்
உறக்கத்தில்

வந்துவிடு
ஒரே ஒருமுறை,
நான் மீளா
துயில் கொள்ளும்முன்...

வெள்ளி, டிசம்பர் 14, 2007

டாலர் கனவுகள்!


ஈன்றவளின் குறலின்றி கண்ணயர்ந்ததில்லை
இன்றோ தொலைபேசியை எடுக்க
டாலரை கணக்கிடும் மனம்!
பெற்றவரை தொலைவில் விட்டு
இங்கே சில கனவுகளில்

கடல்கடக்கும் சகோதரனுக்காய்
வேலை பலுவின் மத்தியிலும்
'ஷாப்பிங்' செய்த அண்ணன்
உறவுகளை கடந்து வந்து
இங்கே சில கனவுகளில்

பிரியும் தினம் அறிந்த போதிலும்
மீண்டும் மீண்டும் கேட்கும் அறைநண்பர்கள்
நண்பர்களின் அரவணைப்பை தாண்டி
இங்கே சில கனவுகளில்

விருந்துகள் கொடுத்து மகிழ்ந்தாலும்
உலாபேசியில் பூரித்தாலும்
உள்ளார்ந்த பயம்தனை காணத்தவறா தோழமை!
தயக்கங்களை மூட்டைகட்டி
இங்கே சில கனவுகளில்

நண்பர்கள் வழியனுப்ப,
முகம் தெரியா தோழி
வாழ்த்துக்கள் கூரியனுப்ப,
ஈரப்புன்னகைகள் சுமந்தபடி
இங்கே சில கனவுகளில்

உறவுகளிடம் சொல்லிவிட்டு
உரிமைகளிடம் சற்றுகலங்கிவிட்டு
கண்டங்கள் கடந்துவந்து,
அழகாய் புன்னகைக்கும் சிகப்பு மனிதர்களின்
மத்தியில் வியப்பாய் வியக்கிறேன்

தாய்தேசத்தை நினைவில் விட்டு
பூமிபந்தில் பாதிதூரம் கடந்திந்த
டாலர் தேசத்தில் கேளாமலே தொடர்கிறது
எனதிந்த டாலர் கனவுகள்.....

சனி, டிசம்பர் 08, 2007

என் ஜன்னலோரம்...


என் ஜன்னலோரம் பூக்கும் ரோஜாவே
தனிமை இரவு இது
துயிலும் நகரம் இது
விழித்திருப்பது நீயும் நானும்

அந்நிய பூமி இது எனை
அந்நியனெனும் தேசம் இது
அன்யோன்யமாய் நீ மட்டும்
அன்பு ரோஜவே

தொலைவாய் வந்தாலும் முகம்
தொலைந்து போய்விடாமல்
தொல்லை கொடுக்க
தொலைவில் இருந்து
உன்னை அனுப்பினாளோ

கூந்தலின் வளவளப்பில்
வழுக்கிவிழும் பயத்தில்
பற்றிக்கோள்ள முட்கள் கொண்டாயோ
அதே பயத்தில்தான் விரல்களில்
சற்றே நகங்கள் கொண்டேன்

பிரிந்தபோதும் பிரியாததாய் பிரிந்த
தருணத்தில் அவள் கண்களில் கொண்ட
கண்ணீர்துளி போல் உன் இதழ்களில்
ஏந்திய பனிதுளியும் ஏனோ

ஞாபகங்களை மறக்க
நினைவுகளை கடந்து வந்தேன்
நினைவுகளை மீண்டும் ஞாபகங்களாக்கி
எனை கொல்வதும் ஏனோ

விடியல் விளிக்கும் நேரமிது
நகரம் இன்னும் விளிக்கவில்லை
நாமோ இன்னும் துயிலவில்லை
மலர்ந்து கொண்டிருக்கிறோம் ரோஜாவே

பொழுதும் விடிந்தது
நாளும் மலர்ந்தது
உடன் நாமும் ரோஜவே

சற்றே சென்று நாளின்
முடிவில் திரும்புகிறேன்
என் ஜன்னலோர ரோஜாச்செடியே
அதுவரை காத்திரு
நாம் இரவில் மீண்டும் மலர்வோம்...

வியாழன், ஜூலை 26, 2007

வேண்டும்...


எதையும் நினையா ஓர் நிமிடம்
எவரையும் எண்ணா ஓர் எண்ணம்


தனித்து இல்லாமல் ஓர் தனிமை
அந்த தனிமைக்குள்ளே ஓர் முழுமை

முழுமை கொண்ட ஓர் உண்மை
முழு உண்மை பேசும் ஓர் தருணம்

தவறுகள் இல்லா ஓர் புரிதல்
புரிதலே தேவையில்லா ஓர் அறிதல்

மூடிகள் இல்லா ஓர் முகம்
எதிர்பார்ப்புகள் இல்லா ஓர் உயிர்

அனைவரும் சமமாய் ஓர் பார்வை
ஒரே பார்வை அது அனைவருக்கும்

நல்லவை மறக்கா ஓர் மனிதம்
எதையும் மறைக்க ஓர் சுதந்திரம்

இயல்பை மாற்றா ஓர் நெஞ்சம்
எதர்க்கும் நடிக்கா ஓர் இதயம்

இழப்புகளை ஏர்க்கும்
மனம்
இழந்த
வர்க்காய் ஏங்கா மனபக்குவம்

காரணம் அற்ற ஓர் கடவுள்
சம்பிரதயங்கள் இல்லா ஓர் அன்பு

இரகசியங்கள் இல்லா ஓர் நட்பு
பேதமை இல்லா ஓர் தோழமை

கவிதைகள் இல்லா ஓர் தேவை
தேவைகள் இல்லா ஓர் கவிதை

விரும்பும் பொழுதில் ஜனனம்
இன்னும் விரும்பும் தருணத்தில் மரணம்


வேண்டாம் வேண்டாம்

எதுவும் வேண்டாம்
ஆசைகள் இல்லா ஒர் மனம்
அதுவே என்றும் வேண்டும்.....

வெள்ளி, ஜூலை 06, 2007

பயணத்தில்...


வசந்தத்தில் ஓர் நாள் அது
கிளிகள் கூட்டை தேடும் தருணமது
இருளுக்கு ஒளி வழிவிடும் பொழுது அது
சப்தங்களை மௌனம் கௌவும் நேரமது

சூழும் இருளை பரவும் அமைதியை,
ஒளி ஒலியால் கிழிக்கும் வாகனங்கள்
எப்போழுதாவது கடக்கும் ஒற்றை
சாலைதன் ஓரமாய் என் மெய்

வழியில் வரும் தென்றலதை மேனி தழுவ
எதிரில் வரும் மேகமதை தேகம் கொள்ள
நானும் என் தனிமையும் கைகோர்த்து
ஓர் நடை பயணதில்

தோற்றமென்பது இருந்ததில்லை
இறுதியென்பது இருப்பதில்லை
ஆரம்பங்களும் முடிவுகளும்
மட்டும் ஏராளம்

துளியில் கைதாகி நிற்கின்றோம்
அதுவே ஆரம்பத்தின் விதையானது
கருவறையை முழுதும் உணராமல்
பயணத்தின் இப்பகுதியில் ஆர்த்தமில்லை

உருயின்றி சுற்றிதிரிந்தோம்
உருகொண்டு தத்தளிக்கின்றோம்
உருயின்றி முக்தி பெருவோம்

லீலைகளில் இத்தோற்றமின்றி
இறையில் ஏது அர்த்தம்
பயணத்தில் இப்பகுதியின்றி
பயணத்தில் ஏது அர்த்தம்

ஒற்றைசாலை திருப்பம் காண
பச்சை போர்வை போர்த்திய
அழகிய கானகம் காத்திருக்கிறது

பயணம் இன்னும் முடியவில்லை
அமைதி வனத்தில் அது தொடர
அதனூடே யோசித்து பார்க்கிறேன்

நீயும் யோசித்துவை தோழா
நமது இந்த பயணம் தான்
என்றும் முடிவதே இல்லையே...

வியாழன், ஜூன் 07, 2007

இருளில்...


விபூதி பூசியாயிற்று
தேவர்களை தொழுதாயிற்று
பலன் கிடைத்தபாடில்லை

முகம் வியர்க்க
உடல் துடிக்க
நள்ளிரவில்
சட்டென்று விழித்தேன்
'
கவிழ்ந்திருந்தது இருள்
சூழ்ந்திருந்தது அமைதி
'சே..' என எண்ணவைக்கும் கனவுகள்
'
கனவினை
தலயனை ஓரமாய்
வழியவிட்டு
புரண்டு படுத்தேன்
'
உறக்கம் வருவதாயில்லை
நீரரும்பி
மணி பார்த்து
மீண்டும் படுத்தேன்
'
எனை அடிக்கடி
வெடிக்கவைக்கும்
கனவுகளை
கண்கள்மூடி தினமும்
இரவின் இருளில்
எதிர்கொள்கிறென்
பயத்துடன்...

வெள்ளி, மே 04, 2007

உனக்கு பிறகான நாட்களில்...


அன்பே நாட்கள்
நகரத்தான் செய்கின்றன

நீ இல்லை இருந்தும் ஆதவன்
தினமும் உதிக்கத்தான் செய்கின்றது

உன் ஓளியின்றி

நீ சென்ற பின்னறும் பௌர்னமி
மாதமொருமுறை ஒளிரத்தான் செய்கின்றது

உன் குளிர்ச்சியின்றி

நீ கடந்துவிட்ட பிறகும் மலர்கள்

தினமும் மலரத்தான் செய்கின்றன
உன் வாசமின்றி
'
நினைவுகள் பூங்காயிருக்கையில் தேங்கிக்கிடக்கின்றன
தொடர்ந்து தேங்கத்தான் செய்கின்றன

உன் சுவாசமின்றி

பயத்திற்க்கு யதார்த்தத்தை காரணம் சொன்னாய்
தைரியயதார்த்தங்கள் நிகழத்தான் செய்கின்றன
உன் பார்வையின்றி


நம்பிக்கை விடுத்து உறவை துறந்தாய்
நம்பிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன
உன் வார்த்தையின்றி

'
அடைந்தவர் கூறலாம் கதைகள்
இழந்தவர் எழுதலாம் கவிதைகள்
எழுத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன
உன் சொற்களின்றி

'உன்னோட நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே'
- வரிகள் உண்மைதான், மரணங்கள் தினமும்
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன
உன் அருகாமையின்றி
'
யதார்த்தமே முதல்முக்கியம்
பாடம் சொல்லிப்போனாய்

நேற்றைய இழப்புகள்
இன்றைக்கான பதில்கள்...
இன்றைய குழப்பங்கள்
நாளைக்கான புன்னகைகள்...

யதார்த்தம் இதுதானே
யதார்த்தத்தை காதலிக்கிறேன்
நான் காதலை காதலிக்கிறேன்

கண்களில் காதலை தோற்றுவிதவளின்
கண்களில் தோன்றிய காதல்
நமக்கன்று எனும்போது
இருள்சூளத்தான் செய்கின்றது
இருந்தும் காட்சிகள் தொடரத்தான் செய்கின்றன
உன்பிம்பம் தவிர வேறன்றி


உறைந்துவிடவில்லை காலத்தின் வேகத்தில்
நொடிகளை காதலிக்கிறேன்

பகலின் பின்தோன்றிய
இரவினும் பின்தோன்றும்

விடியலை நோக்கியிருக்கிறேன்


எதுவாகிலும் அன்பே,
இங்கே நாட்கள் நகரத்தான் செய்கின்றன...

புதன், ஜனவரி 24, 2007

இயற்கையே என்னில் வா


விதையாய் மேட்டில் வீழ்ந்துகிடக்கின்றேன்
மணலாய் நிலமே என்னில் வா

தளிராய் பாறையில் முளைத்து நிற்கின்றேன்
மழையாய் நீரே என்னில் வா

விளக்காய் இருள்மூடக்கிடக்கின்றேன்
ஒளியாய் நெருப்பே என்னில் வா

இலையாய் கிளையிடுக்கில் சிக்கித்தினருகின்றேன்
சுவாசமாய் காற்றே என்னில் வா

அனுக்களின் கூட்டாய் முடங்கிக்கிடக்கின்றேன்
பிரபஞ்சமாய் வெளியே என்னில் வா

பூவாய் பாலையில் மலர்ந்து நிற்கின்றேன்
வண்டாய் உயிரே என்னில் வா

நிலவாய் இரவின் பாதையில் நடக்கின்றேன்
ஞயிராய் ஒளியே என்னில் வா

சூரியனாய் அனல்பறக்க பகலில் பயனிக்கின்றேன்
நிலவாய் குளிர்ச்சியே என்னில் வா

அனுக்களில் பதிந்து கிடக்கின்றேன்
விடுதலையாய் சக்தியே என்னில் வா

உணர்வுகள் வழிகாட்ட அதில் நடக்கின்றோம்
உணர்ச்சிகள் ஆட்டுவிக்க அதில் திளைக்கின்றோம்
இயல்பே அந்த உண்மையாய் எங்களில் வா
இயலே அந்த தெளிவாய் எங்களில் வா

இயலை தேடி நடக்கின்றேன்
அதன் இயல்பை உணர துடிக்கின்றேன்
இயலே என்னில் வா
அந்த இறையே என்னில் வா

கவிதையாய் வாழ வழியில்லை
அதனால் தானே கவிதை எழுதி வாழுகின்றேன்
இயற்கையொடு வாழ இயழவில்லை
அதனால் நானே வாடுகின்றேன்

இனியும் இயங்க வலுவின்றி
இயற்கை எய்துகின்றேன் இன்று நான்
அந்த கவியே என்னில் வா
கவிதையாய் அந்த இயற்கையே என்னில் வா...