சனி, ஏப்ரல் 26, 2008

ஆகினாய்...


வரிகளில் உனை வடித்துப்பார்க்கிறேன்
இங்கே கவிதையாகிப்போனாய்

கல்லில் உனை தரிசிக்கத்துடிக்கிறேன்
இங்கே கண்களாகிப்போனாய்

பூக்களில் உனை அலங்கரிக்க ஆசைகொள்கிறேன்
இங்கே தோரணமாகிப்போனாய்

அழகிலெல்லாம் உனை ஆராதிக்க எத்தனிக்கிறேன்
இங்கே இயற்கையாகிப்போனாய்

என்னில் உனை காணவிரும்புகிறேன்
இங்கே நீ நானாகிப்போனாய்

மெய்ஞானம்தனில் உனை கண்டுகொள்ள அலைகிறேன்
இங்கே விஞ்ஞானமாகிப்போனாய்


இன்னும் இயலோடு இசையாகிப்புன்னகைக்கிறேன்
என் கண்ணனே...
இங்கே எல்லாமும் நீயாகிப்போனாய்!

சனி, ஏப்ரல் 19, 2008

மலரா!!


மலராமல் நிற்கின்றன
நீர்விட்ட பூக்கள்
காற்றில் மிதக்கும்
கந்ததகங்களில் மூச்சுத்திணறி

முடிக்கப்படாமல்
இறைந்து கிடக்கின்றன
கிறுக்கிவைத்த காகிதங்கள்,
மையிட உதிரமுமின்றி
காய்ந்துகிடக்கும் எழுதுகோல்
'
சற்றுமுன் கைகாட்டி
புன்னகைத்த அன்னை
வின்னிலிருந்து விழுந்த
காலனின் காலடியில்,
வீதியெங்கும் தேடித்திரியும் மழலை

கனவுகள் சுமந்த கவிதைகள்
மணற்குவியலின் மத்தியில்
கசங்கிய பூக்களாய்,
சோலையது பாலையாய்

இரைகள் ஏராளமாயினும்
கழுகுகள் பறக்கக்கூட
வின்னில் இடம்தாரா
போர் மேகங்கள்

உயிர் மட்டும் போதும்
இங்கே கடல்கடக்கும்
முடிவில்லா பயணத்தின் தொடக்கம்

எதிரிகளும் அன்பர்களும்
அங்கே அடையாளம் தெரியாமல்,
முடிவில்லா பயம்தனில் ஈழம்!
'
'
நிலாரசிகன் அவர்களின் இந்த கவிதை மற்றும் நண்பர் கார்த்திக் அவர்களின் இந்த பதிவு மூலம் பார்த்த படம், இரண்டின் தாக்கத்தில் கிறுக்கியது இது!

சனி, ஏப்ரல் 12, 2008

அனல்தனில்...


நெருப்பின் விரல்பிடித்து
எழத்துடிக்கிறேன்

அனலின் கதகதப்பில்
பறக்க முயல்கிறேன்

ஆதவனின் தீக்கரம்பற்றி
மிதக்கப்பார்க்கிறேன்

கனலதன் இறக்கைப்பற்றி
விடுதலை வேண்டுகிறேன்

வெந்து சாம்பலாகும்
இயற்கையின் நடுவே
அதை எய்தவிரும்புகிறேன்
'
இங்கே சுடர்வைத்து
எனைக்கொளுத்தி
இருளில் ஒளிந்த
உண்மைகள் தேடுகிறேன்
'
நான் மெதுவாய்
அனல்தனில் உறைகிறேன்,
இன்னும் அழகாய்
அனல்தனில் உறைகிறேன்!