
மனதில் உதிக்கும் வார்த்தைகளை வரிகளாக அடுக்கி வைக்கும் ஒரு பதிவேடாக மட்டுமே இன்றுவரை என் வலைப்பதிவு இருக்கிறது.
முதன்முறையாக "ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!" என்று சில பத்திகள் என்னை எழுத வைத்த திவ்யாவிற்கு முதலில் நன்றி! நான் கிறுக்கியவைகளைப்பற்றி எழுத நல்ல சந்தர்ப்பம்.
கொஞ்சநாளாய் அடுத்து என்ன எழுதலாம் என்று யோசித்தால் எதுவும் தோன்றவில்லை! சரி என்றாவது ஏதாவது தோன்றினால் பார்த்துகொள்ளலாம் என்றிருந்தால் அந்த நேரம் பார்த்து தொடர் ஓட்டம் என்று என்னை இழுத்துவிட்டுவிட்டார்.
"உன் குழந்தைகளில் எது உனக்கு மிகவும் பிடித்தது என்று கேட்டால் என்னசொல்ல?", என்றெல்லாம் வசனங்கள் பேசினால் தாய்மையை வைத்து க(வி)தை எழுதிய திவ்யா என்னை அடிப்பார்!
2007'ல் நான் எழுதியவற்றில் எதை மிகமிக விரும்பினேன்?
இயற்கையோடு ஐக்கியமாகிவிட ஆசைகொண்டு இயற்கை எய்தவேண்டுமென்று நான் எழுதிய 'இயற்கையே என்னில் வா'
நண்பர்களின் ஆழமான காயங்களின் பாதிப்பை அருகிலிருந்து உணர்ந்ததன் விளைவாய் உதித்த 'உனக்கு பிறகான நாட்களில்'
சிலஇரவுகளில் நமை தூங்கவிடாது அதிர்வூட்டும் கனவுகளைப்பற்றி எழுதும் ஆவலில் கிறுக்கிய 'இருளில்'
அயல்தேசம் அரவணைத்தாலும் தனிமை உணர்வுகளின் பாதிப்பில் தோன்றிய 'டாலர் கனவுகள்' மற்றும் 'என் ஜன்னலோரம்'!
எழுதிவிட்டு பதியாமலே போன என் நீண்ட கிறுக்கலொன்று!
எதை சொல்ல...
முடிவில்லா பயணத்தைப்பற்றி எனக்குள் தோன்றிய எண்ணங்களில் உதித்த 'பயணத்தில்' சென்ற வருடம் எழுதிய சொற்ப பதிவுகளில் மிகமிக ஆழ்ந்து எழுதிய ஒன்று. மாலை மயங்கும் நேரமும், தொடரும் சில சிந்தனைகளின் பாதிப்பும், தனிமையில் நான் போய்கொண்டிருந்த அவ்வேளையுமாய் என்னை எழுதத்தூண்டியதன் விளைவே அந்த வரிகள்! அதை படிப்பவர்களுக்கு அதன் அர்த்தம் முழுமையாய் புரியுமா என்று அறியேன், நானே அதன் அர்த்தத்தை இன்னும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன்! 2007'ல் நான் எழுதியதில் அதுவே எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதுகிறேன்.
நான் எழுதிய அனைத்திலும் என்றுமே மிகவிரும்புவது 'நினைவுகள்'. தன்னுடனான நினைவுகளைப்பற்றிக்கேட்டு தன்னையும் அறியாது என்னை முதன்முதலாய் முழுநீளக்கவிதை எழுதவைத்தவர் எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அற்புதமான என் தோழி ஒருவர். என் கண்களுக்காக மட்டுமே சில வரிகள் கிறுக்கிகொண்டிருந்த நான் முதன்முதாலாய் இன்னொருவரின் பார்வைக்காக ஆவலுடன் எழுதியது 'நினைவுகள்'! அவரின் பாராட்டுதலே வலைபதிவு தொடங்க நம்பிக்கை தந்தது.
பி.கு: வலைபதிவில் உள்ள 'நினைவுகள்' நான் பொதுவாக எழுதிய ஒன்று.
தொடர் ஓட்டத்தில் இழுக்க ஐந்து பேர் எல்லாம் எனக்கு தெரியாதே, வலையில் என்னை தெரிந்திருப்பதே ஐந்து பேர் தானே!!
நான் தொடர் ஓட்டத்திற்கு அழைப்பது,
1. தினேஷ்
2. இரசிகா
3. நித்யா