செவ்வாய், டிசம்பர் 25, 2007

பூக்களில் உறங்கும் மௌனங்கள்


புரிந்தபோதும் புரியவைக்க இயலா
சுயத்தின் சிந்தனைகள்

தீட்ட விரும்பி வரையாது
கிழித்த ஓவியங்கள்

வடிக்க நினைத்து எழுதாது
அழித்த வரிகள்

மொழிய நினைத்து பேசாது
ஊமையான வார்த்தைகள்

சந்திக்க நினைத்து பார்க்காது
மறைந்த முகங்கள்

தொண்டைக்குள் சிக்கி கடைசிவரை
வெளிவரமறுத்த விருப்பங்கள்

என் பிழைக்கு தண்டனை ஏற்றபோதும்
இதழ் திறக்கா நண்பனின் காரணங்கள்

அவளின் கேள்விகளுக்கான பதிலை
மொழியாமலே கடத்திய நொடிகள்


என மனதின் ஆழத்தில்
மலராது போன பூக்களே
உங்களில் உறங்கும் மௌனங்கள்
என்னுள் இனியேனும் விழிக்கட்டும்

ஞாயிறு, டிசம்பர் 23, 2007

கனவே!


மூடிய இமைகளுக்குள்
காட்சிகள் மறைந்து போக
நிஜம்போல் நிழல்தனை
காட்டிய என் கனவே

நிஜமது மீண்டும்
ஒருமுறை வேண்டும்
விழிகளுக்குள் வாராய்
என் கனவே

வருவாய் என
துயில்தனில் விழித்திருக்கிறேன்
தருவாய் என
விழிகளுக்குள் பார்த்திருக்கிறேன்

சிப்பிக்குள் அரிதாய்
உதிக்கும் முத்து,
அதனினும் அரிதாய்
இமைகளுக்குள்
உதித்த கனவே
தேடுகிறேன் இன்று

நிழல் தரும் நிழலை
நிரந்தரமாக்கிப்போவாய்
என காத்திருக்கிறேன்
உறக்கத்தில்

வந்துவிடு
ஒரே ஒருமுறை,
நான் மீளா
துயில் கொள்ளும்முன்...

வெள்ளி, டிசம்பர் 14, 2007

டாலர் கனவுகள்!


ஈன்றவளின் குறலின்றி கண்ணயர்ந்ததில்லை
இன்றோ தொலைபேசியை எடுக்க
டாலரை கணக்கிடும் மனம்!
பெற்றவரை தொலைவில் விட்டு
இங்கே சில கனவுகளில்

கடல்கடக்கும் சகோதரனுக்காய்
வேலை பலுவின் மத்தியிலும்
'ஷாப்பிங்' செய்த அண்ணன்
உறவுகளை கடந்து வந்து
இங்கே சில கனவுகளில்

பிரியும் தினம் அறிந்த போதிலும்
மீண்டும் மீண்டும் கேட்கும் அறைநண்பர்கள்
நண்பர்களின் அரவணைப்பை தாண்டி
இங்கே சில கனவுகளில்

விருந்துகள் கொடுத்து மகிழ்ந்தாலும்
உலாபேசியில் பூரித்தாலும்
உள்ளார்ந்த பயம்தனை காணத்தவறா தோழமை!
தயக்கங்களை மூட்டைகட்டி
இங்கே சில கனவுகளில்

நண்பர்கள் வழியனுப்ப,
முகம் தெரியா தோழி
வாழ்த்துக்கள் கூரியனுப்ப,
ஈரப்புன்னகைகள் சுமந்தபடி
இங்கே சில கனவுகளில்

உறவுகளிடம் சொல்லிவிட்டு
உரிமைகளிடம் சற்றுகலங்கிவிட்டு
கண்டங்கள் கடந்துவந்து,
அழகாய் புன்னகைக்கும் சிகப்பு மனிதர்களின்
மத்தியில் வியப்பாய் வியக்கிறேன்

தாய்தேசத்தை நினைவில் விட்டு
பூமிபந்தில் பாதிதூரம் கடந்திந்த
டாலர் தேசத்தில் கேளாமலே தொடர்கிறது
எனதிந்த டாலர் கனவுகள்.....

சனி, டிசம்பர் 08, 2007

என் ஜன்னலோரம்...


என் ஜன்னலோரம் பூக்கும் ரோஜாவே
தனிமை இரவு இது
துயிலும் நகரம் இது
விழித்திருப்பது நீயும் நானும்

அந்நிய பூமி இது எனை
அந்நியனெனும் தேசம் இது
அன்யோன்யமாய் நீ மட்டும்
அன்பு ரோஜவே

தொலைவாய் வந்தாலும் முகம்
தொலைந்து போய்விடாமல்
தொல்லை கொடுக்க
தொலைவில் இருந்து
உன்னை அனுப்பினாளோ

கூந்தலின் வளவளப்பில்
வழுக்கிவிழும் பயத்தில்
பற்றிக்கோள்ள முட்கள் கொண்டாயோ
அதே பயத்தில்தான் விரல்களில்
சற்றே நகங்கள் கொண்டேன்

பிரிந்தபோதும் பிரியாததாய் பிரிந்த
தருணத்தில் அவள் கண்களில் கொண்ட
கண்ணீர்துளி போல் உன் இதழ்களில்
ஏந்திய பனிதுளியும் ஏனோ

ஞாபகங்களை மறக்க
நினைவுகளை கடந்து வந்தேன்
நினைவுகளை மீண்டும் ஞாபகங்களாக்கி
எனை கொல்வதும் ஏனோ

விடியல் விளிக்கும் நேரமிது
நகரம் இன்னும் விளிக்கவில்லை
நாமோ இன்னும் துயிலவில்லை
மலர்ந்து கொண்டிருக்கிறோம் ரோஜாவே

பொழுதும் விடிந்தது
நாளும் மலர்ந்தது
உடன் நாமும் ரோஜவே

சற்றே சென்று நாளின்
முடிவில் திரும்புகிறேன்
என் ஜன்னலோர ரோஜாச்செடியே
அதுவரை காத்திரு
நாம் இரவில் மீண்டும் மலர்வோம்...

வியாழன், ஜூலை 26, 2007

வேண்டும்...


எதையும் நினையா ஓர் நிமிடம்
எவரையும் எண்ணா ஓர் எண்ணம்


தனித்து இல்லாமல் ஓர் தனிமை
அந்த தனிமைக்குள்ளே ஓர் முழுமை

முழுமை கொண்ட ஓர் உண்மை
முழு உண்மை பேசும் ஓர் தருணம்

தவறுகள் இல்லா ஓர் புரிதல்
புரிதலே தேவையில்லா ஓர் அறிதல்

மூடிகள் இல்லா ஓர் முகம்
எதிர்பார்ப்புகள் இல்லா ஓர் உயிர்

அனைவரும் சமமாய் ஓர் பார்வை
ஒரே பார்வை அது அனைவருக்கும்

நல்லவை மறக்கா ஓர் மனிதம்
எதையும் மறைக்க ஓர் சுதந்திரம்

இயல்பை மாற்றா ஓர் நெஞ்சம்
எதர்க்கும் நடிக்கா ஓர் இதயம்

இழப்புகளை ஏர்க்கும்
மனம்
இழந்த
வர்க்காய் ஏங்கா மனபக்குவம்

காரணம் அற்ற ஓர் கடவுள்
சம்பிரதயங்கள் இல்லா ஓர் அன்பு

இரகசியங்கள் இல்லா ஓர் நட்பு
பேதமை இல்லா ஓர் தோழமை

கவிதைகள் இல்லா ஓர் தேவை
தேவைகள் இல்லா ஓர் கவிதை

விரும்பும் பொழுதில் ஜனனம்
இன்னும் விரும்பும் தருணத்தில் மரணம்


வேண்டாம் வேண்டாம்

எதுவும் வேண்டாம்
ஆசைகள் இல்லா ஒர் மனம்
அதுவே என்றும் வேண்டும்.....

வெள்ளி, ஜூலை 06, 2007

பயணத்தில்...


வசந்தத்தில் ஓர் நாள் அது
கிளிகள் கூட்டை தேடும் தருணமது
இருளுக்கு ஒளி வழிவிடும் பொழுது அது
சப்தங்களை மௌனம் கௌவும் நேரமது

சூழும் இருளை பரவும் அமைதியை,
ஒளி ஒலியால் கிழிக்கும் வாகனங்கள்
எப்போழுதாவது கடக்கும் ஒற்றை
சாலைதன் ஓரமாய் என் மெய்

வழியில் வரும் தென்றலதை மேனி தழுவ
எதிரில் வரும் மேகமதை தேகம் கொள்ள
நானும் என் தனிமையும் கைகோர்த்து
ஓர் நடை பயணதில்

தோற்றமென்பது இருந்ததில்லை
இறுதியென்பது இருப்பதில்லை
ஆரம்பங்களும் முடிவுகளும்
மட்டும் ஏராளம்

துளியில் கைதாகி நிற்கின்றோம்
அதுவே ஆரம்பத்தின் விதையானது
கருவறையை முழுதும் உணராமல்
பயணத்தின் இப்பகுதியில் ஆர்த்தமில்லை

உருயின்றி சுற்றிதிரிந்தோம்
உருகொண்டு தத்தளிக்கின்றோம்
உருயின்றி முக்தி பெருவோம்

லீலைகளில் இத்தோற்றமின்றி
இறையில் ஏது அர்த்தம்
பயணத்தில் இப்பகுதியின்றி
பயணத்தில் ஏது அர்த்தம்

ஒற்றைசாலை திருப்பம் காண
பச்சை போர்வை போர்த்திய
அழகிய கானகம் காத்திருக்கிறது

பயணம் இன்னும் முடியவில்லை
அமைதி வனத்தில் அது தொடர
அதனூடே யோசித்து பார்க்கிறேன்

நீயும் யோசித்துவை தோழா
நமது இந்த பயணம் தான்
என்றும் முடிவதே இல்லையே...

வியாழன், ஜூன் 07, 2007

இருளில்...


விபூதி பூசியாயிற்று
தேவர்களை தொழுதாயிற்று
பலன் கிடைத்தபாடில்லை

முகம் வியர்க்க
உடல் துடிக்க
நள்ளிரவில்
சட்டென்று விழித்தேன்
'
கவிழ்ந்திருந்தது இருள்
சூழ்ந்திருந்தது அமைதி
'சே..' என எண்ணவைக்கும் கனவுகள்
'
கனவினை
தலயனை ஓரமாய்
வழியவிட்டு
புரண்டு படுத்தேன்
'
உறக்கம் வருவதாயில்லை
நீரரும்பி
மணி பார்த்து
மீண்டும் படுத்தேன்
'
எனை அடிக்கடி
வெடிக்கவைக்கும்
கனவுகளை
கண்கள்மூடி தினமும்
இரவின் இருளில்
எதிர்கொள்கிறென்
பயத்துடன்...

வெள்ளி, மே 04, 2007

உனக்கு பிறகான நாட்களில்...


அன்பே நாட்கள்
நகரத்தான் செய்கின்றன

நீ இல்லை இருந்தும் ஆதவன்
தினமும் உதிக்கத்தான் செய்கின்றது

உன் ஓளியின்றி

நீ சென்ற பின்னறும் பௌர்னமி
மாதமொருமுறை ஒளிரத்தான் செய்கின்றது

உன் குளிர்ச்சியின்றி

நீ கடந்துவிட்ட பிறகும் மலர்கள்

தினமும் மலரத்தான் செய்கின்றன
உன் வாசமின்றி
'
நினைவுகள் பூங்காயிருக்கையில் தேங்கிக்கிடக்கின்றன
தொடர்ந்து தேங்கத்தான் செய்கின்றன

உன் சுவாசமின்றி

பயத்திற்க்கு யதார்த்தத்தை காரணம் சொன்னாய்
தைரியயதார்த்தங்கள் நிகழத்தான் செய்கின்றன
உன் பார்வையின்றி


நம்பிக்கை விடுத்து உறவை துறந்தாய்
நம்பிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன
உன் வார்த்தையின்றி

'
அடைந்தவர் கூறலாம் கதைகள்
இழந்தவர் எழுதலாம் கவிதைகள்
எழுத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன
உன் சொற்களின்றி

'உன்னோட நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே'
- வரிகள் உண்மைதான், மரணங்கள் தினமும்
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன
உன் அருகாமையின்றி
'
யதார்த்தமே முதல்முக்கியம்
பாடம் சொல்லிப்போனாய்

நேற்றைய இழப்புகள்
இன்றைக்கான பதில்கள்...
இன்றைய குழப்பங்கள்
நாளைக்கான புன்னகைகள்...

யதார்த்தம் இதுதானே
யதார்த்தத்தை காதலிக்கிறேன்
நான் காதலை காதலிக்கிறேன்

கண்களில் காதலை தோற்றுவிதவளின்
கண்களில் தோன்றிய காதல்
நமக்கன்று எனும்போது
இருள்சூளத்தான் செய்கின்றது
இருந்தும் காட்சிகள் தொடரத்தான் செய்கின்றன
உன்பிம்பம் தவிர வேறன்றி


உறைந்துவிடவில்லை காலத்தின் வேகத்தில்
நொடிகளை காதலிக்கிறேன்

பகலின் பின்தோன்றிய
இரவினும் பின்தோன்றும்

விடியலை நோக்கியிருக்கிறேன்


எதுவாகிலும் அன்பே,
இங்கே நாட்கள் நகரத்தான் செய்கின்றன...

புதன், ஜனவரி 24, 2007

இயற்கையே என்னில் வா


விதையாய் மேட்டில் வீழ்ந்துகிடக்கின்றேன்
மணலாய் நிலமே என்னில் வா

தளிராய் பாறையில் முளைத்து நிற்கின்றேன்
மழையாய் நீரே என்னில் வா

விளக்காய் இருள்மூடக்கிடக்கின்றேன்
ஒளியாய் நெருப்பே என்னில் வா

இலையாய் கிளையிடுக்கில் சிக்கித்தினருகின்றேன்
சுவாசமாய் காற்றே என்னில் வா

அனுக்களின் கூட்டாய் முடங்கிக்கிடக்கின்றேன்
பிரபஞ்சமாய் வெளியே என்னில் வா

பூவாய் பாலையில் மலர்ந்து நிற்கின்றேன்
வண்டாய் உயிரே என்னில் வா

நிலவாய் இரவின் பாதையில் நடக்கின்றேன்
ஞயிராய் ஒளியே என்னில் வா

சூரியனாய் அனல்பறக்க பகலில் பயனிக்கின்றேன்
நிலவாய் குளிர்ச்சியே என்னில் வா

அனுக்களில் பதிந்து கிடக்கின்றேன்
விடுதலையாய் சக்தியே என்னில் வா

உணர்வுகள் வழிகாட்ட அதில் நடக்கின்றோம்
உணர்ச்சிகள் ஆட்டுவிக்க அதில் திளைக்கின்றோம்
இயல்பே அந்த உண்மையாய் எங்களில் வா
இயலே அந்த தெளிவாய் எங்களில் வா

இயலை தேடி நடக்கின்றேன்
அதன் இயல்பை உணர துடிக்கின்றேன்
இயலே என்னில் வா
அந்த இறையே என்னில் வா

கவிதையாய் வாழ வழியில்லை
அதனால் தானே கவிதை எழுதி வாழுகின்றேன்
இயற்கையொடு வாழ இயழவில்லை
அதனால் நானே வாடுகின்றேன்

இனியும் இயங்க வலுவின்றி
இயற்கை எய்துகின்றேன் இன்று நான்
அந்த கவியே என்னில் வா
கவிதையாய் அந்த இயற்கையே என்னில் வா...

வெள்ளி, டிசம்பர் 29, 2006

ஏமாற்றங்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விடிவெள்ளியின்
தரிசனத்திற்காக
முன்னிரவிலிருந்து
விழித்திருந்து
உச்சகாட்சியில்
கண்கள் மூடிவிட்ட
விடிகாலை... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆசையாய்
மத்தாப்பு கொளுத்த
வேகமாய் வர
தீபாவளி இரவில்
முந்திக்கொண்ட மழை... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விளையாட்டாய்
பிடித்து வைத்து
பின்மனமிறங்கி
விடுவித்தபோது
உயிர் விட்டிருந்த
பட்டாம்பூச்சி... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கேட்க நினைத்த கேள்விகள்,
யூகித்திருந்த பதில்கள்,
பேச துடித்த வார்த்தைகள்,
எதுவுமே மொழியப்படாமல்
அந்த கடைசி மாலையில்
அவளை இழுத்து சென்ற இரயில்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மனதில் ஆழமாய் 
வேர்கொண்டும்
முளைக்க நீரின்றி
முடங்கிப்போன
கனவுவிதைகள்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ - தொடரலாம்...

வெள்ளி, டிசம்பர் 08, 2006

வெளி


அந்த அழகிய இயற்கை அன்னையின் மடியில்
இதோ நான்...

தென்றலின் நாதமதற்கு இசை பாடும்
குயிலின் கீதமதற்கு நடனமாடும்
புல்லின் மெத்தை தனில் இதோ நான்...

வியக்கிறேன் அந்த படைப்பை அதன் படைப்பாளியை
அந்த தோற்றத்தை அதை தோற்றுவித்தவனை
அந்த கவிதையை அதன் கவிஞனை
அந்த அழகை அதை கொண்ட அந்த வெளியை...

கவிஞனே உன் முகம் காட்டு
உன் கவிதையின் முழு பொருள் காட்டு
படைப்பாளியே உன் தோற்றம் கூறு
உன் படைப்பின் முழு தேற்றம் கூறு

விடையின்றி தவிக்கிறோம்
கேள்விகளுக்கு விடையாக கேள்விகளே கிட்ட
இன்னும் தேடுகிறோம்...

வியக்கிறோம் அந்த விண்வெளியை
அதில் பயனிக்கும் மண்டலங்களை
அதில் சுற்றும் குடும்பங்களை
அதில் உலாவும் கோள்களை
அதில் உறையும் ஜீவன்களை
அத்தனையும் எத்துனை அழகு!

கவிதை தந்த பரம்பொருளே
உன் பிறப்பை தேடுகின்றோம்
கவிதைக்கு வடிவம் தந்த பிரம்மமே
உன் வடிவம் தேடுகின்றோம்
கவிதைக்கு பொருள் கொடுத்த முழுமுதர்பொருளே
உன் பொருள் தேடுகின்றோம்

அனைத்துக்கும் விதிகளை விதித்தவனே
அந்த விதிகளின் விதியை தேடுகின்றோம்
அந்த விதிக்கான தேற்றமதனை தேடுகின்றோம்

அந்த முழுதேற்றம் கண்டெடுப்போம்
அதுவரை நாங்கள்... தேடியிருப்போம்!

திங்கள், டிசம்பர் 04, 2006

அன்பின் நிலையிலே...


சொல்லித்தெரிவதில்லை நட்பு நிலை
சொல்லாமல் தெளிவதில்லை காதல் நிலை

பார்வையில் பிறப்பதரிது நட்பு நிலை
பார்வையில் கூட மலர்வதுண்டு காதல் நிலை


காலமதன் ஓட்டத்தில் இனிய நினைவுகளாய்
தொடர்பற்று போகலாம் நட்பு நிலை
காலமதன் ஓட்டத்தில் அழகிய நிகழ்வுகளாய்

தொடர்ந்தோடலாம் காதல் நிலை

நில்லாது தொடர்ந்தால் வாழ்வில்
புன்னகை சேர்க்கலாம் நட்பு நிலை
தொடராது நின்றால் மனதில்
வற்றா கண்ணீராகலாம் காதல் நிலை

விட்டுகொடுத்தல் மாற்றிக்கொள்ளல்
தேவையற்று
அழகிய புரிதலில் செல்லும் சிறந்த நட்பு நிலை
விட்டுகொடுத்தும் சிலமாறுதல்கள் கண்டும் புரிதலை

கடந்த மேல்நிலையில் செல்லும் சி
றந்த காதல் நிலை

தொடநினைக்காவிட்டாலும் சில சமயங்களில்
தொட்டுபேசுவது அவசியமாகலாம் - நட்பு நிலை
தொடநினைத்தாலும் தள்ளி தொடாமல் பேசுவது
எப்போதும் அழகாகும் - காதல் நிலை

எனக்கு நீ உனக்கு நான் அழகாய் தேவை
என்று அன்பாய் செல்லும் நட்பு நிலை
எனக்கு நீ உனக்கு நான் என்றல்ல
நமக்கு நாம் நிச்சயமாய் தேவை
என்ற புரிதலில் செல்லும் காதல் நிலை

விதிகளை உணர்ந்து அதை மீறாது
அமைதியாய் செல்லும்
உன்னத நட்பு நிலை
விதிகளை அமைத்து அதை தாண்டாது

அழகாய் செல்லும் தூய காதல் நிலை

பலமுறை பலருடன் பல நிலைகளில்

வரும் இனிய நட்பு நிலை
ஒருமுறை ஒருவருடன் மட்டுமே
ஒரு நிலை
கடந்தே வரும் முதிர்ந்த காதல் நிலை

வாழ்கை பயணத்தில் முக்கிய நிகழ்வுகளை
அழகாய் பகிர்ந்து செல்லும் நெருங்கிய நட்பு நிலை
வாழ்கை பயணத்தின் முக்கிய பாதையை
அழகாய் பகிர்ந்து செல்லும் தேர்ந்த காதல் நிலை

அன்பும் அரவணைப்பும் இரண்டிலும் குறைவதில்லை
சற்றே உரிமை, பெரிதாய் தவிப்பு, அன்பாய் ஏக்கம்,

அழகாய் வெட்கம், அமைதியாய் எதிர்பார்ப்பு...
தவிர வேறுபாடு வேரில்லை

அதனதன் நிலைகளில் உன்னதமானவை
அதனதன் பரிமானங்களில் புனிதமானவை

வாழ்கை பயணத்தில், அறிவாய் வழிகாட்டி செல்லும்
நல்ல நட்பு நிலை
வாழ்கை பயணத்தில், அழகாய் அழைத்து செல்லும்
நல்ல காதல் நிலை


ஆதலால்...
நட்பே உனை வணங்குகிறேன்,
காதலே உனை போற்றுகிறேன்...

சனி, டிசம்பர் 02, 2006

துளிகள் II

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இல்லை

கற்பனைகள் மட்டுமே
கவிதைகளில் வருமாயின்
எங்களின் வார்த்தைகளில்
கனவுகள் இல்லை...

அனுபவங்கள் மட்டுமே
கவிதைகளாகுமாயின்
எங்களின் வரிகளில்
நிகழ்வுகள் இல்லை...

காதல் செய்தால் மட்டுமே
கவிதைகள் தோன்றுமாயின்
எங்களின் எழுத்துக்களில்
காதல் இல்லை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வருவதில்லை

சூழும் பனியை தீ மூட்டி சுட்டபோது
தொலைவில் நடுங்கும் நாய்குட்டியை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

இலையில் கசிந்த பனிநீரை ருசித்தபோது

மலர துடித்து பனியில் உறைந்த மொட்டை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

சொகுசு பேருந்தில் சொகுசாய் பயணிக்கும்போது

ஜன்னலின் அருகே கையேந்தும் சிருமியை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

நிஜமொன்று இருக்கும்
போதும்
நிழல் மட்டும் சொந்தமாவதை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !


எனக்கு ஒரு கவிதை எழுத வருவதில்லை !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவள்

அவள் - தூரும் மழையின் சாரலை
ஜன்னலோரமாய் இரசிக்க வைத்தவள்

அவள் - வானவில்லின் வண்ணங்களில்
என்னை ஓவியம் தீட்டவைத்தவள்

அவள் - என் தாய்மொழியில்
என்னை கவிஞனாக்கியவள்

அவள் - பூக்களின் மேல் என்னை
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாக்கியவள்

அவள் - காரணங்களின்றி என்னை
புன்னகை சிந்த வைத்தவள்

அவள் - பூவின் இதழ்களை வருடக்கூட
எனக்குள் பயம் கொடுத்தவள்

அவள் - பின்னொரு மாலையில் கண்களை
வற்றா நீர்தேக்கமாக்கிப்போனவள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

- தூரல் தூவும்...

செவ்வாய், அக்டோபர் 10, 2006

என்னில் அல்ல...


வெய்யிலில் நடக்கிறாய் நீ
வியர்வை என் நெற்றியில் அல்ல,
என் நெஞ்சத்தில்...

மழையில் நினைகிறாய் நீ
காய்ச்சல் என் உடலில் அல்ல,
என் உள்ளத்தில்...

விழுந்தது தூசி உன் கண்ணில்
கலக்கம் என் கண்ணில் அல்ல,
என் மனதில்...

காலனியின்றி கல்லில் நடக்கிறாய் நீ
வலி என் பாதத்தில் அல்ல,
என் இதயத்தில்...

பதம் பார்த்தது கொலைகாரக்கல் உன் விரலை
வலி என் விரலில் அல்ல,
என் உயிரில்.....

நிலவினில்...


நிலவினில் கால் பதிப்போம்
போட்டிகளை கண்டு அஞ்சவேண்டாம் தோழா
நாமே முதலில் நிலவில் கால் பதிப்போம்

நிலவினில் கால் பதிப்போம்
எட்ட பாதையில்லையெனில் ஏணி சமைத்திடுவோம் தோழா
நிச்சயமாய் நாம் நிலவில் கால் பதிப்போம்

நிலவினில் கால் பதிப்போம்
நமைக்கண்டு ஏளனமாய் நகைத்திடுவோர்க்கு

புன்னகையை பரிசாய் அளிப்போம் தோழா
கண்டிப்பாய் நாம் நிலவில் கால் பதிப்போம்

நிலவினில் கால் பதிப்போம்
நாம் உறக்கத்தில் கனவு காண்பவர்கள் என்பவர்களுக்கு
நிகழ்வுகளை நினைவுகளாக்கிக்காட்டுவோம் தோழா
சத்தியமாய் நாம் நிலவில் கால் பதிப்போம்

நிலவினில் கால் பதிப்போம்
நாம் வீண்பேச்சுக்காரர்கள் என்போர் முன்
உலகம் முழுக்க நமைப்பற்றியே பேசவைத்துக்காட்டுவோம் தோழா
வாராய் நாம் நிலவில் கால் பதிப்போம்...

திங்கள், செப்டம்பர் 18, 2006

மழை... மனம்... காதல்...


மழை துளியில் ஒளியின் சிதறல்
வின்னில் வானவில்...
என் விழித்திரையில் அவள் பிம்பத்தின் சிதறல்
மனதில் காதல்...

சிப்பி என்னும் கூட்டிற்குள்
மழைத்துளியின் குடியிருப்பு முத்து...
என் மனதெனும் வீட்டிற்குள்
அவளின் குடியிருப்பு காதல்...

மணல் மேட்டுடன் மழைதுளியின்
கூடல் மண்வாசனை...
என் மனதெனும் ஏட்டுடன் அவள்
விழித்துளியின் கூடல் காதல்...

விளைநிலத்தில் மழைத்துளியின்
சங்கமம் தானியம்...
மனதில் அவளுடனான நொடிகளின்
சங்கமம் காதல்...

மலரின் இதழ்களில்
மழையின் துளிகள் - அழகிய காட்சி...
மனதின் அறைகளில்
அவளின் நினைவுகள் - அழகிய காதல்...

இரசித்தவை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் சாம்பல் ஆனாலும்

என் காதல் வாழுமே

அந்த சாம்பல் மீது உனக்காக

சில பூக்கள் பூக்குமே

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா

மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீ
மடா...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்பத்தில் பிறந்து இன்பதில் வளர்ந்து

இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து

துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடவுள் மனிதனை படைத்தானா

கடவுளை மனிதன் படைத்தானா

இரண்டு பேரும் இல்லையே ரொம்பத்தொல்லையே...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனதினில் பலகோடி நினைவுகள் இருந்தாலும்

உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்

கோழைக்கு காதலென்ன ஊமைக்கு பாடலென்ன

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரசிப்பேன்...

திங்கள், செப்டம்பர் 04, 2006

இரசித்தவை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ என்னிடம் பேசியதைவிட
எனக்காக பேசியதில்தான் உணர்ந்தேன்
நமக்கான நட்பை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னை ஓரகண்ணால்
பார்த்துக்கொண்டே
பக்கத்தில் உள்ள
உன் தோழியிடம்
பேசிக்கொண்டு
அப்படியே ஏதோ
எழுதுவதுபோல்
நடித்துக்கொண்டிந்தபோதுதான்
புரிந்தது எப்போதும்
புரியாத இந்த‘ மல்டி டாஸ்கிங்’

-கவிஞர் நவீன் ப்ரகாஷ்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவசரமாய் எழுதிய கவிதைகளில்
என் தோழியாய் இருந்தாய்
நீ பிரிந்து சென்றபின்
ஓர் பௌர்ணமி இரவில்
படித்துவிட்டு கலங்கினேன்
என் காதலியாய் இருந்திருக்கிறாய்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஓடிச்சென்று ந‌னைந்துவிட‌
நினைப்ப‌த‌ற்குள் நின்றுவிட்ட‌து
மழை...
மண்வாசத்தில் நனைகிறது உயிர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடற்கரையின்
முகம் தெரியாத‌ இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும் பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்

-கவிஞர் அறிவுமதி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உள்ளயர்ந்த
துயரங்களையெல்லாம்
உதறி எறிந்துவிட்டால்
ஒன்றுமே இல்லாமல்
போய்விடுமென்கிற பயம்தான்
அப்படியே வைத்திருக்கிறது
ஆறாத காயங்கள் சிலவற்றையும்...

- Unknown
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இரசிப்பேன்...

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2006

எது அழகோ?


எது அழகோ...
புற்களின் மத்தியில் மின்னும்
பனித்துளி...
இமைகளின் நடுவில் ஒளிரும்
அவள் விழி...

எது அழகோ...
தென்றலுடன் தோள்தொட்டு சிறகடிக்கும்
அவள் துப்பட்டா...
போட்டியாய் அதன் மேல்தொட்டு பறக்கும்
அவள் கூந்தல்...

எது அழகோ...
அடிக்கும் குளிருக்கு துப்பட்டா
அவளுக்கு போர்வையாவது...
போடும் தூறலுக்கு அதுவே
அவளுக்கு குடையாவது...

எது அழகோ...
தலை தாழ்த்தி விழிசுடர் தூக்கி
மெலிதாய் ஒரு புன்னகை...
தலை சாய்த்து ஒரு கண் மூடி
பெரிதாய் ஒரு சிரிப்பு...

எது அழகோ...
தன்னைத்தானே அவள் சுற்றும்போது
அவளை சுற்றும் ஒற்றை ஜடை...
துள்ளிக்குதித்து அவள் வரும்போது கற்றில்
அலையென பறக்கும் அவள் விரிந்த கூந்தல்...

தனியாய் ஓர் பயணம்...


கடல் கடந்து தேசம் கடந்து அங்கோர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

உறவைப்பிரிந்து உணர்வைப்பிரிந்து
தூரத்தில் ஓர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

இதுவரை கண்டு இதுவரை உணரும்
நிகழ்காலமிதை விடுத்து தொலைவில் ஓர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

இதுவரை காணாத இதுவரை உணராத
அந்நியத்தில் ஓர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

உன்ன உணவில்லை உறைய இடமில்லை
சோதனையில் ஓர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

என்னவளை கண்டு மாதங்கள் ஆகின்றது
எனை ஈன்றவளை கண்டு வருடங்கள் ஆகின்றது
வேதனையில் ஓர் எதிர்காலம்
அதை தேடி ஓர் நம்பிக்கை பயணம்

சுற்றிலும் மனிதர்கள் நம் இனத்தவர்கள்
இருந்தும் ஒவ்வொருவரும் தனித்தனியே
தனிமையில் ஓர் எதிர்காலம்
அதை தேடி இதோ.. தனியாய் ஓர் பயணம்...