திங்கள், பிப்ரவரி 11, 2008

தொலைத்த மௌனங்கள்!

'

கேள்விகள் விடையின்றி கழிந்தன என்னளவில்
கேள்விகளே இங்கில்லை அவளளவில்
இடையில் கடந்திருந்ததோ பரிதாபமாய் காலம்!

கேள்விகளுக்கு உயிரில்லை என்றாள்
இறந்த அவைகளை நான்
இறக்கும்வரை சுமக்கவைத்தாள்

ஆரம்பங்கள் அழகுதான்
அதில் தொடங்குவது புன்னகைகள்,
தொலைந்ததாய் கூறும்போது
எஞ்சுவது நீர்துளிகள் மட்டுமே!

காரணங்கள் அவை அறிவதரிது
முகம் நான் இனி பார்ப்பதரிது
ஓர்முகம் என்றும் அறியாதது!

பாதைகள் மங்கும் தூரம் தூரத்திலில்லை
இருந்தும் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை
கேள்விகள் மீண்டும் உயிர்பெறலாம்
அதுவரை மீண்டும் நான் பேசும் ஊமையாய்!

ஒருமௌனம் கலைய வேறு உரை
ஒருகூண்டு திறக்க வேறு சிறை
இங்கே உரைகளும் சிறைகளும்
மட்டுமே மாறுகின்றன

அவள் தொலைத்தது அங்கே மறுமுகமா
நான் தொலைத்தது இதில் நிகழ்வுகளா
நாங்கள் தொலைத்தது இங்கே காரணங்களா

எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோ
இருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்!

ஞாயிறு, பிப்ரவரி 03, 2008

காற்றில் ஓர் கவிதை!

'
சின்னாபின்னமான கட்டிடங்கள்
சிதறிகிடக்கும் துகள்கள்
எங்கும் தெரிக்கும் குருதிகள்
காதை பிளக்கும் ஓசைகள்

நடக்க எப்போதோ மறந்துபோய்
நில்லா ஓட்டத்தில் என் கால்கள்

தாய்மண்ணின் மானம்காக்க
நான் மௌனம் கலைந்தேன்
இங்கே வீரனெனும் மூடியனிந்தேன்
'
காரணங்கள் நான் அறியேன்
அது ஆள்பவர்களின் கவலை
உயிர் குடிக்க வந்தேன்
என்னுயிர் துறக்கத் துனிந்தேன்

சிதறிய துகள்களில் தாவிவிரைந்தேன்
பதறிய என்னுள்ளத்தை ஆற்றதுடித்தேன்
இடரிய முகங்களை கொன்றுகுவித்தேன்

பறக்கும் தோட்டாக்கள் என்மார்பை பிளக்க
இதயம் இதற்குமேல் துடிக்க மறுக்க
என்கால்கள் கூட நிலைகொண்டுவீழ
வீழ்ந்துகிடக்கிறேன் புழுதியில்
மூழ்கிக்கிடக்கிறேன் என்குருதியில்

உனக்காய் என்பணி நான் செய்தேன்
எனக்காய் நாடே ஒன்று செய்வாயோ!

ஈன்றவளிடம் போய் சொல்
உன்மகன் தாய்க்குத்தாயான
நாட்டின் மானம் காத்தவனேன்று

பெற்றவரிடம் போய் சொல்
உன்பிள்ளை ஊருக்காக உயிர்தந்து
பெருமை சேர்த்தவனென்று

என்னவளிடம் போய் சொல்
உன்னவன் உனக்காக சேர்த்தது
களத்தில் சிகப்பு பூக்களென்று

என்மைந்தனிடம் போய் சொல்
உன்தந்தை உனக்கு கற்றுதந்தது
வாழ்விலென்றும் துணிச்சலென்று

விரல்கள் அசையமறுக்க
கண்களில் பார்வைமங்க
எஞ்சிய என்னுயிர் கொண்டு
காற்றில் ஓர் கவிதை வறைகிறேன்
தென்றலே அதை நீ சற்று
சேருமிடம் சேர்ப்பாயோ!